Home பழமொழிகள் சிறுதுளி பெரு வெள்ளம் – பாடம் புகட்டும் பழமொழிகள்

சிறுதுளி பெரு வெள்ளம் – பாடம் புகட்டும் பழமொழிகள்

334
0

வெள்ளம் பெருகியதாக இருக்கலாம். ஆனால் அது திடீரென உருவாகியதல்ல. பல இலட்சக்கணக்கான சிறுதுளிகள் ஒன்றாக சேரும் போதுதான் அது வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றது. மழை பெய்யும் போது வானத்திலிருந்து விழும் நீர் சிறுசிறு துளிகளாகவே காணப்படுகின்றது. அந்தத் துளிகள் விரைவில் நீர்த் தாரையாகிப் பூமியில் ஒன்று சேர்ந்து வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. பல்லாயிரக் கணக்கான சிறு துளிகள் சேரும் போதே வெள்ளம் உருவாகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்னும் பழமொழி நமக்கு எதை உணர்த்துகிறது? சிறுசிறு முயற்சிகள் பெரிய சாதனைகளுக்குக் காரணமாகின்றன என்ற உண்மையினையே இப் பழமொழி நமக்கு உணர்த்துகிறது. சிறுதுளிகள் பெருவெள்ளமாக மாறுவது போலச் சிறுகச் சிறுகச் சேமித்து வந்தால் அது நாளடைவில் பெரும் செல்வமாகும் என்ற உண்மையினையும் இப் பழமொழி நமக்குப் புலப்படுத்துகிறது.

வாழ்க்கை பணத்தை மையமாகக் கொண்டே சுழல்கிறது. நமது அன்றாட வாழ்வில் இதனைக் கண்கூடாகக் காண்கின்றோம். அதனால்தான் ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்கின்றார்கள். பணத்தின் அருமை கருதியே ‘பணம் பத்தும் செய்யும்’, ‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்றார்கள்.

இன்றைய உலகில் செலவு இல்லாத மனிதரே இல்லை எனலாம். பணம் சேர்ப்பதே செலவு செய்யத்தான். வாழ்வில் பல்வேறு செலவுகள் வரும். இவற்றிற்கெல்லாம் பணம் அவசியமாகின்றது. அன்றாடச் செலவுகளுக்கு அதிக பணம் தேவையில்லாதிருக்கலாம். ஆனால் மருத்துவம் போன்ற அவசியச் செலவு அதிகமாகவும் ஆகலாம். இது திட்டமிட்ட செலவல்ல. திடீர்ச் செலவு. எனவே இது போன்ற திடீர்ச் செலவுக்கு எப்போதும் பணம் கையில் இருக்க வேண்டும்.

சேமிப்பு இருந்தால்தான் இது சாத்தியமாகும். திடீர்ச்செலவுகளுக்கு மட்டுமன்றி வீடுகட்டுதல், திருமணம் போன்ற எதிர்காலச் செலவினங்களைச் சமாளிக்கவும் எதிர்கொள்ளவும் சேமிப்பு அவசியமாகின்றது. நாம் சிறுகச் சிறுகச் சேமித்தாற்றான் இது சாத்தியமாகும்.

மலையில் இருந்து ஊற்றெடுத்து வரும் ஆற்று நீரை அணைகட்டித் தேக்காமல் விட்டால் – அவற்றின் போக்கில் விட்டு விட்டால் நீர் மண்ணுக்கும் மரத்துக்கும் பயன்படாமல் வீணாகும். அதுபோலத்தான் பணத்தைச் சேமிக்காமல் வர வரச் செலவிட்டால் அதுவும் பயன்தராது வீணாகி விடும் . வெள்ளத்தை தடுக்க அணை கட்டியிருந்தால் நீரைத் தேக்கித் தேவைக்கேற்ப அதனைப் பயன்படுத்தலாம். தேவை அறிந்து திறந்து விடலாம். அதேபோல் பணத்தை நாம் சேமித்து வைத்திருந்தால் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நீரைத் தேக்க அணை அமைக்கத் திட்டமிடல் அவசியம். அதேபோல் பணம் சேர்க்கத் திட்டமிடல் அவசியமாகின்றது. திட்டமிட்டுச் சேர்த்தால் வாழ்வு வளமுறும்.

சேமிப்பின் பயன்கள் எண்ணற்றவை, சேமிப்பு இருக்குமானால் திடீர்ச்செலவுகளை எதிர்கொண்டு தீர்க்க முடியும். பணம் இருந்தால் பயம் இல்லை .வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்துவதற்கு பணமே அடிப்படையாக அமைந்துள்ளது. சிறுகச் சிறுகப் பணத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலமே வாழ்க்கையில் எதிர் கொள்ளும் செலவினங்களை சமாளிக்க முடியும். சேமிப்பதற்கு இன்று பலவழிகள் உள்ளன. வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு வழியுண்டு. பாடசாலைகளிற் கூட வங்கி நிறுவனங்கள் மாணவர்கள் சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு ஊக்கமளிக்கின்றன. வங்கியில் நிலையான வைப்பு நிதியாகப் பெரும் பணம் போட்டுச் சேமிப்பைச் செம்மைப்படுத்தலாம்.

நாம் நாளாந்த செலவுகளைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் பணத்தைச் சேமிக்கப் பழக வேண்டும். சிந்தித்துச் செலவு செய்வோமாயின் செலவினைச் சுருக்கிக் கொள்ள முடியும்.

சிறுகச் சிறுகச் சேர்க்கும் தேனீக்களைப் போல நாமும் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமிக்கப் பழக வேண்டும். இதனால் நமது வாழ்வு வளம் பெறும். சிறிய எறும்புகளைப் பாருங்கள். அவை மழைக்காலத் தேவைக்கான உணவு வகைகளை வெயிற் காலத்திலேயே சேகரித்து விடுகின்றன. அவையும் நமக்குப் பாடம் கற்பிக்கின்றன. எதிர்காலச் சிந்தனையோடு எல்லோரும் சேமிக்க முற்பட்டால் நாமும் நலம் பெறுவது திண்ணம். சிறுதுளி பெரு வெள்ளம் என்னும் இப் பழமொழி புகட்டும் பாடம் இதுதான். நம் வாழ்வு வளம் பெற இப் பழமொழி கற்றுத் தரும் பாடத்தை நன்கு கடைப்பிடிப்போமாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here