Home பழமொழிகள் பழுத்த ஓலையைப்பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்

பழுத்த ஓலையைப்பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்

0
0

பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்’. பழுத்த பனை ஓலையொன்று பனை மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. காற்றடித்தால் வீழ்ந்து விடும். அதனுடைய பரிதாப நிலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரித்தது. அந்தச் சிரிப்பின் அர்த்தம் என்ன? ‘நீ கிழடு தட்டிப்போய் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கின்றாய். என்னை ஒரு கணம் திரும்பிப்பார். எவ்வளவு இளமையோடும் பொலிவோடும் இருக்கின்றேன்’ என்று நையாண்டி பண்ணுவது அச்சிரிப்பில் இருந்தது.

இப்பொழுது பழுத்துத் தொங்கும் ஓலையும் ஒரு காலத்தில் குருத்தோலையாகத்தான் இருந்தது. இப்போது குருத்தோலையாக இருக்கும் தானும் ஒரு காலத்தில் பழுத்த ஓலையாகி விழ வேண்டியிருக்கும் என்பதை அது மறந்துவிட்டது.

மூப்பு என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. என்றோ ஒருநாள் அனைத்து உயிர்க்கும் அது வந்தே தீரும். முதுமையும் தள்ளாமையும் என்றோ ஒருநாள் நமக்கும் வந்தே தீரும். இந்த உண்மை சாதாரணமானதுதான், ஆனால் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது. இதனை நன்கு சிந்தித்தால் இளமையின் அகம்பாவம் நம்மைவிட்டு நீங்கிவிடும்.

இந்தப் பழமொழியில் மற்றோர் கருத்தும் மறைந்து கிடக்கின்றது. முதுமைக்கும் அதைத் தொடர்ந்து வரும் மரணத்துக்கும் மனிதன் தயாராகி விட்டால் எத்தனையோ விடயங்களில் அவனுக்கிருந்த குழப்பங்கள் நீங்கிவிடும். அன்றைக்கு உள்ள சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வசதி கிட்டும்.

மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் எண்ணம் எழும். தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை, பலவீன மானவர்களை அலட்சியப்படுத்தும் எண்ணம் தோன்றாது.

‘பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்” என்ற பழமொழி மிகப் பெரிய வாழ்க்கை உண்மையை நமக்குப் புலப்படுத்துகிறது. வாழ்க்கை உண்மைத் தன்மையைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிலையாமையையும் முதுமை நிச்சயம் வந்தே தீரும் என்பதையும் இப் ‘பழமொழி நமக்கு நன்கு புலப்படுத்துகின்றது. எனவே எதுவும் நிலையானது என்று எண்ணாமல் சூழ் நிலைகளின் தன்மைக் கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். பழமொழிகள் நமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. செல்ல வேண்டிய நெறியை அவை அறிவித் து உதவுகின் றன. எச் சரிக் கைக் குறிப்புகளாகவும் சில சமயம் அவை அமைகின்றன. தவறு செய்யும் மனதைத் திருத்துகின்ற நன் மருந்தாகவும் அவை தொண்டு புரிகின்றன. சில பழமொழிகள் அன்புத்தாயின் நல்லுரை போல அறிவுரை கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here