Home பழமொழிகள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

51
0

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது முதுமொழி. பல்லாண்டு காலமாக நம் முன்னோர் பயன்படுத்திவரும் பழமொழி இது. இப் பழமொழியின் கருத்து மிக ஆழமானது. மனிதகுலத்துக்குப் பாடம் கற்றுத் தருவது.

முக அழகு என்பது ஒருவருடைய முக அமைப்பைப் பொறுத்த விடயம் மட்டுமல்ல. மூக்கு அழகாக, எடுப்பாக, கண்கள் கவர்ச்சியாக, உதடுகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த, நெற்றி பிறை நிலாத் தோற்றம் கொள்ள இருந்து விட்டால் மட்டும் அந்த முகம் அழகாகி விடும் என்று கூறுவதற்கில்லை .

இயற்கையே முகத்தை உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக ஆக்கி வைத்திருக்கிறது. உள்ளத்தில் நிழலாடும் உணர்வுகளை, கிளர்ச்சிகளைப் பிரதிபலித்துக் காட்டுவது முகமாகும். சிறு குழந்தைகளின் முகங்களை நாம் பார்ப்போமாயில் அவர்களது முகங்களில் அவர்களது அக அழகை நன்கு காணலாம். கள்ளங்கபடமற்ற அவர்களது உள் அழகை அவர்களது முகம் நன்கு காட்டும், இத்தோற்றத்தை குழந்தைத்தனம் என்று கூறுவர். மாசுமறுவற்ற அவர்களது உள் அழகே அவர்களது முகங்களில் பிரதிபலிக்கின்றது. ஆனால் வயது முதிர்ந்தோரின் முக அழகைக் குழந்தைகளின் முக அழகுடன் ஒப்பிட்டுக் கூறிவிட முடியாது. குழந்தைகள் வஞ்சகம் அற்றவர்கள். அவர்களது உள்ளம் பால் போல தூய்மையானது.

‘நாற்பது வயதுக்குப் பிறகு ஒருவன் தன்னுடைய முகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அவனே பொறுப்பாளி ஆகிறான்’ என்கிறார் ஆபிரகாம்லிங்கன். ஒருவனது உள்ளத்து உணர்வுகளை அவனுடைய முகமே காட்டிவிடும் என்ற உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.

உள்ளம் தெளிவாக, உணர்ச்சிபூர்வமாக, எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் போது முகத்துக்கு ஒரு தனி அழகு – தேஜஸ் ஏற்பட்டு விடுகிறது. உலகம் போற்றும் பெரியார்களின், மகான்களின் முகங்களைப் பாருங்கள், அவை சாமுத்திரிகா இலட்சணப்படி அழகான முகத்தோற்றம் கொண்டவை என்று சொல்வதற்கு இல்லை . ஆயினும் அவர்களது முகப்பொலிவு அனைவரையும் அவர்கள்பால் ஈர்த்து விடுகிறது. அவர்களது அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்ததே இதற்குக் காரணமாகும்.

அடுத்து காட்டும் பளிங்குபோல் – நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

தன்னையடுத்த பொருளினையுடைய நிறத்தை தானே கொண்டு காட்டும் பளிங்கு போல ஒருவன் நெஞ்சத்து எழும் உணர்வுகளை அவன் முகம் தானே கொண்டு காட்டும் என்கிறார் வள்ளுவர். அவர் மேலும் கூறுகிறார்.

“முகத்தின் முதுக் குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்”

ஒருவனை உவந்தாலும் கோபித்தாலும் முகம் முற்பட்டு அவற்றை காட்டும். ஆதலால் முகம் போல் அறிவுமிக்கது, பிறிது எதுவும் இல்லை என்பது இதன் கருத்தாகும். எனவே அகத்தின் அழகை முகமே பிரதிபலிக்கும் என்ற உண்மையினை. இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

ஒப்பனையால் ஒருவர் அழகாகி விடமுடியாது. உள்ளத் தூய்மையால் மட்டுமே மற்றவர்கள் நேசிக்கின்ற – விரும்புகின்ற அழகைப் பெற முடியும். இதைத்தான் அகத்தினழகு முகத்தில் தெரியும் என்னும் முதுமொழி நமக்குணர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here