கலியுக வரதன் முருகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாள் குறித்து ஓர் சிறப்பு தொகுப்பு!

0
49

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது . ஏனெனில், இன்று (04) தான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே .

இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு ‘விசாகன்’ என்ற திருநாமமும் உண்டு.

சூரபத்மனும் அவனது அசுரர் கூட்டத்தினரும் அமரர்களை அடிமைப்படுத்தியதுடன் அவர்களுக்கு நாள்தோறும் சொல்லிடங்காத் துன்ப துயரங்களையும் விளைவித்தனர். இதனைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்.

அசுரர்களின் அக்கிரமங்களை அழித்துத் தேவர்களைக் காக்கத் திருவுளம் கொண்ட சிவனார் தமது நெற்றிக் கண்களைத் திறந்தார். இதன் காரணமாக ஆறு தீப்பொறிகள் உருவானது.

அந்தப் பொறிகளின் வெப்பத்தைப் பொறுக்க முடியாத அக்கினி பகவான் அதனைச் சரவணப் பொய்கையில் கொண்டு சென்று விட்டார். அப் பொறிகளிலிருந்து ஆறு குழந்தைகள் உருவாகின.

சக்தியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாகத் தூக்கி ஆறு திருமுகங்கள் உடைய ஒரு அழகிய குழந்தையாக உருவாக்கினாள். இவ்வாறு சரவணப் பொய்கையில் சரவணனாக வந்துதித்த திருநாளே வைகாசி விசாக நட்சத்திரப் பெருநாளாகும் .

முருகக் கடவுள் தோன்றிய வைகாசி விசாக தினத்தன்று அதிகாலையில் துயிலெழுந்து , நீராடிப் பகல் முழுவதும் உண்ணாமல் ஐம்புலன்களையும் ஒன்றாக இணைத்து விரதமிருப்பதுவே முறை. உடல் நிலை சரியாக அமையுமிடத்து நீர் ஆகாரத்துடன் மட்டும் இவ்விரதத்தை நோற்றிட முடியும்.

இவ் விரதத்தை ஒருவர் முறையாக நோற்று வருமிடத்து மனதிலுள்ள சஞ்சலங்கள் யாவும் நீங்குவதுடன் மனதுக்கு அமைதியும் கிடைக்கும் . எடுத்த காரியங்கள் யாவும் இனிதாகவும், வெற்றியாகவும் அமையும்.

முருகப் பெருமான் அவதரித்த இந் நாளில் பல ஞானியர்களும் பிறந்திருக்கின்றார்கள். குறிப்பாக பெளத்த மத தர்மத்தை உலகுக்குப் போதித்த புத்த பெருமான் பிறந்தது, ஞானம் பெற்றது, பரி நிர்வாண நிலையை அடைந்தது யாவுமே வைகாசி விசாக நட்சத்திரத்திலேயே ஆகும்.

வைகாசி விசாக தினத்திலன்று இந்தியாவின் திருச்செந்தூர் முருகனுக்குப் பன்னீர் அபிஷேகம் இடம்பெறுவது வழக்கம். திருச்செந்தூரில் மட்டுமன்றி இலங்கையிலும், இந்தியாவிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களிலும் வைகாசி விசாக நாளில் விசேட அபிஷேக பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

ஆகவே, வைதாரையும் வாழவைக்கும் வடிவேலன் பிறந்த இந்த வைகாசி விசாக விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து வருமிடத்துச் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here