அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி கிருஷ்ணபிரியா! சசிகலா உறவுகள் அதிர்ச்சி!

அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி கிருஷ்ணபிரியா! சசிகலா உறவுகள் அதிர்ச்சி!
அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார்.

அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த மகள். போயஸ் ராணியாக இவர்தான் வரப்போகிறார்’’ என ஆளும்கட்சியின் அதிகார மையத்தில் வலம் வருபவர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

ஆட்சியிலும் கட்சியிலும் மிகமிக மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே அறிந்த முகம் இவர். அதிகம் அறியப்படாத முகமான இவருக்கு, அ.தி.மு.க-வின் இளவரசியாக மகுடம் சூட்டிக்கொள்ள ஆசை பிறந்து விட்டது என்ற தகவலால் ஒட்டுமொத்த சசிகலா உறவுகளும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அடுத்த தலைவர்!அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா சிறையில் இருக்கிறார். சிறை செல்லுமுன் கட்சியை வழிநடத்த அவர் துணைப் பொதுச்செயலாளராக நியமித்த டி.டி.வி.தினகரனும் திகார் சிறையில் ஜாமீனுக்காகக் காத்திருக்கிறார்.

சசிகலா குடும்பத்தைக் கட்சியை விட்டு விலக்க வேண்டும்’ என்று பன்னீர்செல்வம் அணி கோரிக்கை வைத்து வருகிறது.

தினகரன் குடும்பத்தின் ஆதிக்கத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என்று எடப்பாடி பழனிசாமி அரசில் அமைச்சராக இருக்கும் சிலர் சொல்கிறார்கள்.

நான் அ.தி.மு.க-வை விட்டு ஒதுங்கி விட்டேன்’ என்று தினகரன் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இப்படி சசிகலா குடும்பத்துக்கு வெளிப் படையான எதிர்ப்பு எழுந்திருந்தாலும், கட்சியும் ஆட்சியும் அந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

தினகரன் மெளனமாகி விட்ட இந்த நேரத்தை இளவரசியின் குடும்பம் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது. அதுதான் இப்போது மெள்ள மெள்ள வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது.

அதாவது, சசிகலா குடும்பத்தின் கையிலிருந்து கட்சியைக் கைப்பற்ற இளவரசி குடும்பம் தயாராகி வருகிறது.சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மூத்த மகள்தான் கிருஷ்ணபிரியா.

திருச்சியைச் சேர்ந்த கலியபெருமாளின் மகன் கார்த்திகேயன்தான் இவருடைய கணவர். ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஜெயராமன் உயிரிழந்தார்.

அதன்பிறகு இளவரசி தனது பிள்ளைகளோடு போயஸ் கார்டனில்தான் வசித்து வந்தார். கிருஷ்ணபிரியாவும் திருமணத்துக்கு முன்பு வரை போயஸ் கார்டனில்தான் இருந்தார்.

தற்போது கணவருடன் தனி வீட்டில் வசித்துவரும் கிருஷ்ணபிரியா, அதிகார ஆசையில் தனி ரூட் போடும் விவரத்தை அவருக்கு நெருக்கமானவர்களே நம்மிடம் விவரித்தார்கள்.

சசிகலாவை மீறியது இளவரசி குடும்பம்!

கிருஷ்ணபிரியா ஆரம்பகாலங்களில் போயஸ் கார்டனிலிருந்து, ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைப் பார்த்ததால் அவருக்கு அரசியல் மீதும், அரசுப்பதவி மீதும் ஒரு கண் இருந்துள்ளது.

2011-ம் ஆண்டுக்கு முன்புவரை இளவரசியின் குடும்பம் சசிகலாவுக்குக் கட்டுப்பட்டே இருந்துள்ளது. இளவரசியின் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்த பிறகுதான், இளவரசியும் ஒரு பவர் சென்டராக மாறத் தொடங்கினார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இளவரசி கைநீட்டிய சில நபர்களுக்கும் சீட் வழங்கப்பட்டது. இளவரசிக்கு ஆலோசகராக அப்போது இருந்தவர், கிருஷ்ணபிரியாவின் மாமனார் கலியபெருமாள்.

2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா ஓரம் கட்டினார். அப்போதும் இளவரசியை நீக்கவில்லை. போயஸ் கார்டனைவிட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட போதும், இளவரசி போயஸ் கார்டனில்தான் இருந்தார்.

இனிமேல் நம்முடைய குடும்பத்தினருக்கு நல்ல நேரம்’ என்று இளவரசி நினைத்தார். இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் ஆகிய இருவரும் ‘ஜெயலலிதாவுக்கு இனி எல்லாம் நாங்கள்தான்’ என்ற ரீதியில் செயல்பட்டார்கள்.

ஆனால், சில மாத இடைவெளியில் மீண்டும் சசிகலாவின் கை கார்டனில் ஓங்கியது. அப்போதே, முதலில் உஷாராகிப் பணிவு காட்டியவர்கள் இளவரசி குடும்பத்தினர்தான். ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் குடும்பம் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.

சமூக சேவகியான கிருஷ்ணபிரியா!

கிருஷ்ணபிரியா பொதுநலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக ‘கிருஷ்ணபிரியா பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனமே கிருஷ்ணபிரியாவின் உள்மனதில் இருந்த அரசியல் ஆசையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணபிரியாவின் இந்தத் தொண்டு நிறுவனம் குறித்த செய்தி ஒரு பத்திரிகையில் வந்ததைப் பார்த்த ஜெயலலிதா, இளவரசியைக் கூப்பிட்டு அந்தப் புத்தகத்தைத் தூக்கிப் போட்டாராம்.

தனியாக அரசியல் செய்யப் பார்க்கிறீர்களா? பெரிய சமூக சேவகியா உனது மகள்?’ என்று டென்ஷன் ஆகி, சத்தம் போட்டாராம். அதன்பிறகும் தனது அறக்கட்டளை வேலைகளைத் தொடர்ந்தாலும், தன் பெயரோ, முகமோ வெளியில் வராமல் பார்த்துக்கொண்டார் கிருஷ்ணபிரியா.

ஏமாந்த இளவரசி!

அக்கா கிருஷ்ணபிரியாவைப் போலவே அடுத்து அவர் தம்பி விவேக் தனது துடிப்பைக்காட்ட ஆரம்பித்தார். குழந்தைப் பருவம் முதலே போயஸ் கார்டனில் வளர்ந்தவர் விவேக். அதனால் அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும் ஜெயலலிதா அக்கறையோடு கவனித்து வந்தார்.

படிப்பு முடிந்தபிறகு விவேக்குக்கு என்று சொந்தமாகத் தொழில் வேண்டும் என்று ஜெயலலிதாவிடமும் சசிகலாவிடம் இளவரசி நெருக்கடி கொடுத்தார். அப்போதுதான் லக்ஸ் சினிமாஸ் நிறுவனம் விவேக்கிடம் வந்தது.

அதன் தொடர்ச்சியாக ‘விவேக்குக்கு கட்சியில் பொறுப்பு வேண்டும்’ என்று இளவரசி கேட்டுள்ளார். ஆனால், ‘விவேக் சின்னப் பையன். அவனுக்கு அரசியல் ஆசை ஏற்படுத்திக் கெடுத்து விடாதீர்கள்’ என்று ஜெயலலிதா சொல்லி வந்தார்.

விவேக் திருமணத்துக்கு ஜெயலலிதாவை வரவழைத்து, அவரை அரசியல் வாரிசு என்று சொல்ல வைப்பதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டன. ஆனால், விவேக் திருமணத்துக்கு ஜெயலலிதா போகவில்லை. இது இளவரசி குடும்பத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்பட்டது.

மேக்கப் சசிகலா... பேக்கப் பிரியா!

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சசிகலாவிடம் பாசம் காட்டி அதிகாரத்தைப் பெற இளவரசியின் வாரிசுகள் முயற்சி செய்தார்கள்.

கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்’ என்று தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்டாயப்படுத்திய போது, அதை முதலில் வரவேற்றது இளவரசி குடும்பம்தான்.

அவர் பொறுப்புக்கு வந்தால்தான், அவரை வசப்படுத்தித் தாங்கள் அந்த இடத்தை அடைய முடியும் என்று இவர்கள் முடிவெடுத்தார்கள்.

சசிகலாதான் அடுத்த பொதுச்செயலாளர் என்று முடிவானதும் அவருடைய உடை, மேக்கப், ஹேர்ஸ்டைல் என அனைத்தும் ஒரே நாளில் மாறியது. அதன் பின்னணியில் இருந்தது கிருஷ்ணபிரியா.

முதலில் சசிகலாவே இதை விரும்பவில்லையாம். ‘உங்களுக்கு நல்லா இருக்கும் அத்தை. பெரிய பதவிக்குப் போகும்போது பர்சனாலிட்டி முக்கியம்’ என்று கிருஷ்ணபிரியாதான் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகுதான் மார்டன் சசிகலாவாக அவர் வெளியில் வந்தார். அந்த மேக்கப்தான் சசிகலா பற்றிய பல விமர்சனங் களுக்கு அடித்தளம் போட்டது’’ என அனைத்தையும் விவரித்தார்கள்.

சிறைக்குச் செல்லும் முன் செக்!

கிருஷ்ணபிரியாவின் அரசியல் ஆசைக்கு வடிவம் கொடுக்கப்பட்டது, சசிகலா சிறைக்குச் சென்ற பெப்ரவரி 16-ம் தேதிதான்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அன்று காலை போயஸ் கார்டனில் சசிகலாவுடன் அவரது குடும்ப உறவுகள் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அப்போதுதான் டி.டி.வி.தினகரனைத் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிப்பது என்று முடிவாகியது.

அந்த ஆலோசனையில் இளவரசி குடும்பமும் பங்கேற்றுள்ளது. இளவரசி சிறைக்குச் செல்லும் முன் சசிகலாவிடம் கண்ணீர் மல்க சத்தம் போட்டிருக்கிறார்.

அம்மாவின் ஹைதராபாத் வீட்டைக் கவனிக்கப் போனதால் தானே என் கணவரைப் பறிகொடுத்தேன். உங்களுக்காகக் கையெழுத்துப் போட்டதால், இப்பச் சிறைக்குப் போகப்போகிறேன். அரசியல் ரீதியாக என் குடும்பத்துக்கு நீங்க என்ன செய்திருக்கீங்க?’ என இளவரசி அழுததும், சசிகலா அப்செட் ஆகிவிட்டாராம்.

அதன் பிறகுதான் சசிகலா, ‘கட்சியைத் தினகரன் பார்த்துக்கொள்ளட்டும்... சொத்துகளை உங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ளுங்கள். கார்டன் சாவியும் உங்கள் பொறுப்பில் இருக்கட்டும்’ என்று சொல்லியுள்ளார்.

ஆனால், அதன்பிறகு வரிசையாக நடைபெற்ற ஆடுபுலி ஆட்டத்தில் இப்போது இளவரசி குடும்பத்தின் கையே முழுமையாக ஓங்கியுள்ளது.

உமாபாரதி போல மாறிய கிருஷ்ணபிரியா!

தினகரன் இருந்தவரை கட்சியைப் பற்றி இளவரசி குடும்பத் தரப்பு அக்கறை காட்டவில்லை. ஆனால், தினகரன் சிறைக்குச் சென்ற பிறகு நிலைமை மாறிவிட்டது.

சொத்துகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுபோல கட்சியையும் தங்கள் கைவசம் கொண்டுவர வேண்டும் என்று இளவரசியின் வாரிசுகள் கணக்குப் போட்டுள்ளார்கள்.

கிருஷ்ணபிரியா தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘அத்தை (சசிகலா) இனி அரசியல் செய்வதற்கு வாய்ப்பில்லை. தினகரனுக்கு ராகு திசை இப்போது நடக்கிறது. அதனால், அவருடைய அரசியலும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

அதனால் இனி நான்தான் அரசியலில் இறங்கப் போகிறேன்” என்று பிரகடனம் செய்துள்ளார்.கிருஷ்ணபிரியாவின் சமீபத்திய நடவடிக்கைகள், அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

கிட்டத்தட்ட ஒரு சாமியாரினிபோல பேசும் அவர், ‘நான் தீட்சை வாங்கிவிட்டேன். மண்ணுக்குக் கீழே விளைந்த எந்தப் பொருள்களையும் சாப்பிடுவதில்லை’ என்று சொல்லிவருகிறார்.

கழுத்தில் ருத்ராட்ச மாலை, முழுக்கை பிளவுஸ் என்று கிருஷ்ணபிரியாவின் தோற்றமே மாறியுள்ளது. ‘நான் தமிழகத்தின் உமாபாரதி’ என்று சொல்கிறாராம்.

தான் அரசியலுக்கு வருவதோடு, தன் தம்பி விவேக்கையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர என்ன செய்யலாம் என்ற ஆலோசனையிலும் கிருஷ்ணபிரியா ஈடுபட்டுள்ளார்.

சசிகலா குடும்ப உறவுகள் மத்தியில் நடராசன் பேச்சுக்கு எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். ஆனால், பிரியாவிடம் அது எடுபடவில்லையாம்.

கணவர் கையில் மிடாஸ்... பிரியா கையில் பங்களாக்கள்!

மிடாஸ் மது உற்பத்தி நிறுவனம் முழுக்க முழுக்க கிருஷ்ணபிரியா கணவர் கார்த்திகேயன் கட்டுப்பாட்டில் உள்ளது. மிடாஸ் வரவு செலவுகள் அனைத்தையும் கிருஷ்ணபிரியா பார்க்கிறார்.

பைனான்ஸ் மேனேஜர் செல்வகுமார் வைத்ததே அங்கு சட்டம். மர்ம தேசமாக இப்போது மாறியிருக்கும் கொடநாடு எஸ்டேட், அதிலுள்ள பங்களா அனைத்தும் இளவரசியின் இரண்டாவது மகள் ஷகிலா கட்டுப்பாட்டில் உள்ளன.

இவருடைய கணவர் பெயர் ராஜராஜன். பையனூர், சிறுதாவூர் பங்களாக்களின் பிரதான சாவிகள் இப்போது பிரியா கையில் உள்ளதாம்.

இப்படி சசிகலா பெயரிலும், ஜெயலலிதா பெயரிலும் இருந்த பல அசையா சொத்துகள் இப்போது பிரியா கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாம். ஜெயலலிதாவின் கஜானாவே இப்போது பிரியா கைவசம்தான் உள்ளது.

அதாவது, அவர்தான் இன்றைய அ.தி.மு.க-வின் இளவரசி. நாளை மகாராணி! ‘இப்போது எடப்பாடி ஆட்சியில் இருந்தாலும், ஆட்சி போனால் அவர்கள் கட்சியை விட்டு ஓடிப்போய் விடுவார்கள்.

அப்போது கட்சியைக் காப்பாற்ற என்னால் மட்டுமே முடியும். கட்சியை நடத்தப் பணம் வேண்டும், அது என்னிடம் உள்ளது’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கிருஷ்ணபிரியா கூறியுள்ளாராம்.

கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக்... இந்த மூவர் கூட்டணி மீது சசிகலா குடும்பத்தின் பிற உறவுகள் இப்போது ஏக கடுப்பில் இருக்கிறார்களாம். சசிகலாவினால் மட்டுமே அவர்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், சசிகலாவே இளவரசியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். சிறையில் சசிகலாவுக்கு வேண்டிய உதவிகளை விவேக்தான் கவனித்து வருகிறார். அதனால் இந்தக் குடும்பத்தின் கை ஓங்குவதைச் சசிகலாவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது’’ என்றார்கள்.

எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் எம்.எல்.ஏ-க்களுக்குப் பின்புலமாக இளவரசி குடும்பம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற கிருஷ்ணபிரியா தேதி குறித்துக் களம் இறங்கிவிட்டார். அடுத்த ஆட்டம் ஆரம்பம்.

அப்செட் அனுராதா!

ஜெயா டி.வி நிர்வாகத்தை ஆரம்பத்தில் பார்த்துக் கொண்டிருந்தவர், தினகரனின் மனைவி அனுராதா.

2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, டாக்டர் சிவகுமார் மனைவிதான் ஜெயா டி.வி பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஜெயா டி.வி நிர்வாகம் பழையபடி தனக்கு வழங்கப்படும் என்று அனுராதா எதிர்பார்த்தார்.

ஆனால், சிறையில் இருந்த சசிகலா, ‘‘விவேக், ஜெயா டி.வி-யைப் பார்த்துக்கொள்ளட்டும்’’ என்று சொன்னதும் அனுராதா அப்செட் ஆகியுள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக ஜெயா டி.வி-யும் நமது எம்.ஜி.ஆரும் செய்திகளை வெளியிட்டு வந்த போதும் ஜெயா டி.வி-யின் பிடி நம் கையில் இல்லையே என வருத்தப்படுகிறார் அனுராதா.

விவேக் கைக்குப்போன ஜெயா டி.வி-யில் விவேக்கின் மாமனார் குடும்பத்தினர் நிர்வாக விஷயங் களிலும் தலையிட ஆரம்பித்துள்ளனர்.

நமது எம்.ஜி.ஆர்’ சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 2011-ல் சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு, ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக பூங்குன்றன் பொறுப்பேற்றார்.

நிர்வாகத்தையும் அவரே கவனித்தார். இப்போது அதன் நிர்வாகத்தில் இருந்து பூங்குன்றன் முழுமையாக நீக்கப்படாவிட்டாலும், விவேக்கிடம் அந்தப் பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

போயஸ் கார்டன் இப்போது!

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இப்போது கிருஷ்ணபிரியாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவ்வப்போது போயஸ் கார்டன் வேதா இல்ல வீட்டுக்கு வரும் கிருஷ்ணபிரியா, வீட்டின் உள்ளே பூட்டப்பட்டு இருக்கும் நான்கு அறைகளின் சாவிகள் இவர் வசம்தான் இருக்கின்றன.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவோடு 40 ஆண்டுகளாகத் தங்கியிருந்து சமையல் செய்து கொடுத்த ராஜம்மாள் என்ற பாட்டிதான் இப்போதும் அங்கு இருக்கிறார். விவேக்கும் அடிக்கடி இங்கு வந்து போகிறார்.

தினசரி இங்கு வரும் பூங்குன்றன், போயஸ் தோட்டத்துக்கு வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதுவது மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளைச் செய்து வருகிறார்.

அவரைப் பற்றி விவேக்கிடம் ஏதோ பற்ற வைத்திருப்பார்கள் போல! சில நாள்களுக்கு முன்பு போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்ற விவேக், அங்கிருந்த பூங்குன்றனிடம், “இது, எங்க வீடு. உன் இஷ்டத்துக்கு நடக்க முடியாது” என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் நொந்து போயுள்ளார் பூங்குன்றன்..

- Vikatan
Previous Post Next Post