குறைந்த விலையில் மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இருவர் கைது : ஹெரோயின் பக்கட்டும் மீட்பு

குறைந்த விலையில் மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இருவர் கைது : ஹெரோயின் பக்கட்டும் மீட்பு


எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்வெல நகரில் குறைந்த விலைக்கு கையடக்க தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இருவரை நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துக்கொண்ட குறித்த இளைஞர்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியதன் விளைவாக அவர்களிடமிருந்த 53087 ரூபாய்கள் பெறுமதியான மீள் நிரப்பு அட்டைகளையும் 30 மி.கிராம் எடையுடைய ஹெரோயின் பக்கற்றையும் அவர்களிடமிருந்த 25 ஆயிரம் ரூபாய்கள் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு குறித்த குற்ற செயலுக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முச்சக்கரவண்டி ஓட்டுனரான குறித்த இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளையடுத்து குறித்த மீள் நிரப்பு அட்டைகள் வெலிமடை மற்றும் ஊவா பரணகமை ஆகிய பகுதிகளிலுள்ள சில வியாபார நிலையங்களை உடைத்து திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

பஸ்ஸர மற்றும் வெலிமடை பகுதியைச் சேர்ந்த குறித்த இரு இளைஞர்களும் பல்வேறுபட்ட திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் ஒருவர் கொமாண்டோ படையணியில் சேவையில் ஈடுபட்டவர் என்பதும் அவர் சேவையை விட்டு திருட்டுத்தனமாக ஓடி வந்தவர் என்றும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைதானவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 
Previous Post Next Post