சலரோகமும் நரம்பியல் கோளாறுகளும்

சலரோகமும் நரம்பியல் கோளாறுகளும்


நீண்ட கால சலரோகம் காரணமாக ஏற்படுகின்ற பிரதான விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். மூளை, முண்ணான் மற்றும் அவற்றிலிருந்து  வெளியேறும் நரம்புகள் உடலின் பிரதானமான அங்கங்களான இருதயம், நுரையீரல் போன்ற பகுதிகளுக்கும் தகவல்களை வழங்கும் ஊடகமாக  விளங்குகின்றன.

சலரோக நோய் காரணமாக இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதனால் நரம்புகளிற்கு குருதியினை வழங்கும் சிறிய இரத்தக்குழாய்கள் பாதிக்கப் படுகின்றன.

இதன் விளைவாக நரம்புக்கலங்களின் தொழிற்பாட்டிற்குத் தேவையான சத்துக்கள் அவற்றை நோக்கி எடுத்துச் செல்லப்படாதவிடத்து அந்நரம்புக்கலங்கள் படிப்படியாக தொழிற்பாடற்று அழிவடைகின்றன. குறிப்பாக பிரதான அங்கங்களில் உள்ள நரம்புகள் பாதிப்படையும் பொழுது அவற்றின் பாதிப்புகள் ஆரம்பத்தில் நோயாளிகளினால் உணரப்படுவதில்லை.  

இதன் பொழுது கட்டுப்பாடற்ற நீண்டகால சலரோகத்தினால் உடலின் அனைத்துப்பகுதியிலுமுள்ள நரம்புகள் படிப்படியாக விரைவாக செயலிழக்கின்றன.

இவ்வாறாக ஏற்படும் நரம்பியல் கோளாறுகள் மூன்று வகைப்படும்.

 1. உணர்ச்சி நரம்புகள் பாதிப்படைதல்


நமது உடலிலுள்ள தொடுகை, வெப்பம், நோவு போன்ற உணர்வுகளிற்குப் பொறுப்பான நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகின்ற நிலையைக் குறிக்கும். இது பொதுவாக கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படுகின்றதாயினும் சில நோயாளிகளில் கைகளிலும் ஏற்படலாம். இவ்வாறாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.

 • விறைப்பு மற்றும் கூசுவது போன்ற உணர்வு

 • நோவினை உணர முடியாதிருத்தல்

 • வெப்பநிலை மாற்றங்களை அடையாளங்காண முடியாமை

 • உடற்பகுதிகளுக்கிடையான ஒருங்கிணைப்பு இழக்கப்படுத்தல் (குறிப்பாக மூட்டுக்களிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது)

 • எரிவு மற்றும் வலி (இரவு நேரங்களில் தீவிரமாக காணப்படலாம்)


இதனால் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய சிறிய காயங்களைக் கூட அவர்களால் உணர முடியாது இருக்கும்

 • வெறுங்காலுடன் நடத்தல்

 • கரடுமுரடான காலணிகள் அணிதல்

 • முறையற்ற அளவிலான காலணிகள் அணிதல்

 • நெருப்புக்காயங்கள் ஏற்படல் (சைலென்சர்)


மூட்டுக்களிலுள்ள உணர்ச்சி நரம்புகள் செயலிழக்கும் பொழுது நிரந்தரமான  வலியற்ற மூட்டு வீக்கங்கள் ஏற்படும். இதனால் நோயாளிக்கு நடப்பதற்கு மேலும் சிரமம் ஏற்படுவதுடன் விழுவதரைக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

 

  2. பரிவு மற்றும் பரபரிவு  தொகுதி சார்ந்த நரம்பு கோளாறுகள்

இந்நரம்புத் தொகுதியானது இருதயம், இரைப்பை, குடல் மற்றும் இனப்பெருக்கத் தொகுதிக்கான நரம்பிணைப்புக்களை மேற்கொள்ளுகின்றது. இதில் கோளாறு ஏற்படும் பொழுது

   • இரைப்பை செயலிழத்தல்

   • கட்டுப்பாடற்ற மலசல  வெளியேற்றம்

   • ஒழுங்கற்ற இருதய அடிப்பு

   • ஒழுங்கற்ற வியர்வை வெளியேற்றம் (குறைந்த வியர்வை வெளியேறுதல்/உண்ணும் பொழுது அதிகரித்த வியர்வை வெளியேற்றம்/ வெப்பத்தைத் தங்க முடியாத தன்மை)

   • ஆண்மையின்மை


3. இயக்கநரம்பு தொடர்பான கோளாறுகள்

இதன் பொழுது தசைகள் சோர்வடைந்து மெலிய ஆரம்பிக்கும். இதனால் கால் மற்றும் கைகளில் உள்ள சிறிய தசைகள் சோர்வடைவதனால்

 • அடிக்கடி சமநிலையற்று விழுதல் மற்றும் ஆடைகளிலுள்ள பொத்தான்களை பூட்ட முடியாதிருத்தல்

 • அடிக்கடி கால் தசைகளில் பிடிப்பு


என்பன  ஏற்படும்.

நீண்ட கால சலரோக நோயினால் ஏற்படும் நரம்புக் கோளாறுகளுக்கான சிகிச்சைகளும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகளும்

சலரோகத்தினால் ஏற்படக்கூடிய நரம்புக்கோளாறுகளிற்கு பல  வகையான வலி நீக்கும் மாத்திரைகள் உட்பட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நரம்புக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தமுடியும்.

 • இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவினை கட்டுப்பாட்டிற்குள் பேணுதல்

 • வருடத்திற்கு ஒரு முறையாவது பாதங்களை பரிசோதனை செய்தல்

 • நரம்பியல் கோளாறு தொடர்பான அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படுவது போல இருப்பின் வைத்தியரிடம் முற்கூட்டியே தெரிவித்தல்

 • பாதங்களில் உணர்வற்ற தன்மை இருக்குமென நீங்கள் அறியும் பொழுது அவற்றை காயங்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதுடன் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என  நாளாந்தம் கால்களை சோதித்தல்

 • வைத்தியரின் ஆலோசனைகளிற்கேற்ப  விசேடமாக வடிவமைக்கப்பட்ட காலணிகளை அணிதல்

 • பாதுகாப்பற்ற உடற்பயிற்சிகளை தவிர்த்தல்


சலரோக நோயாளிகளில் நரம்பியல் கோளாறுகளை இனங்காணுதல்

 1. முறையான பாதப்  பரிசோதனைகளை தகுந்த வைத்தியரின் உதவியுடன் குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையாவது  மேற்கொள்ளல்.  இதன் பொழுது தோலில் ஏற்படும் காயங்கள்,  கொப்புளங்கள்  என்பன  இனங்காணப்படுவதுடன் தசைகள், எலும்புகள் மற்றும் இரத்தஓட்டம் என்பவை சீராக நடைபெறுகிறதா எனவும் சோதிக்கப்படும்.

 2. மேலதிக பரிசோதனை தேவைப்படின் நரம்பு மற்றும் தசைகளின் செயற்பாட்டினை அறிவதற்காக Nerve Conduction Studies யினையும் மேற்கொள்ளலாம்.


 

Dr.R.Surenthirakumaran MD(Com. Med.)
Consultant Community Physician & Senior Lecturer
Head Department of Community and Family Medicine,
Faculty of Medicine, University of Jaffna

Previous Post Next Post