அரசியலமைப்பு மாற்றமும்மாற வேண்டியதும்.அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக வர்ணிக்கப்படும் ஒரு கட்டமைபப்பு. அது ஒரு புனித ஏடு என்று கூட வர்ணிக்கலாம் ஏனெனில் அதிலுள்ள உள்ளடக்கங்கள் சட்டங்கள் நியதிகள் என்பன ஒரு நாட்டின் இறையாண்மையை ,ஐக்கியத்தை,அரசியலை,ஆணிவேரை, அன்னியோன்னியத்தை, ஆண்ம பலத்தை,இனங்களின் ஒன்றுமையை எடுத்தியம்பும் ஏடாகும்.

அதற்கப்பால் அது அந் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கும் முதுகெலும்பாகவும் திகழ்கிறது.
ஒரு நாட்டின் அரசியலமைப்புக்கும் அந் நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி ,அமைதி என்பனவற்றுக்கும் பாரிய நேரடி ,மறைமுக தொடர்புகள் இருக்கின்றன.
ஏனெனில் ஒரு நாட்டில் பல இனங்கள் வாழ்கின்ற போது அவ்வினங்களை சமமாக மதித்து அந் நாட்டின் சகல சட்ட உரிமைகளையும் அனுபவிக்கும் உரித்துடையவர்களாக ஒவ்வொரு இனம் அமையும் போதே அந்த நாட்டில் வேற்றுமை இல்லாது இனப்பினச்சனைகள் இல்லாது அமைதியாக அந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்ற படிகளை அடைந்து செல்லும்.
அவ்வாறு சமத்துவம் இன ஒற்றுமை இல்லாது விடின் நாட்டின் அமைதி குலைந்து பொருளாதார வளங்கள் அழிக்கப்படும். அண்டை நாடுகள் அந்நாட்டின் அரசியலில் மூக்கை நுழைகும் நிலைக்கு தள்ளப்பட்டு நாடு ஸ்திரமற்ற பாதையில் தள்ளாடி பயணிக்கும்.

இவையெல்லாம் ஆங்காங்கே உலக நாடுகளில் நடைபெறுவதாக அமைகின்றன.
வளர்சி அடைந்த நாடுகளின் வரலாற்றையும் அரசியலமைப்பையும் புரிவதன் மூலம் நம் நாட்டின் நிலமையும் நம் நாட்டைப் போன்ற நாடுகளின் நிலையும் புரியும்.
பெரும்பாலும் இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பெரும் பிரச்சனையாக இருப்பது சம உரிமை சம அந்தஸ்து வழங்காத அரசியலமைப்புச் சட்டங்கள் அமுலில் இருப்பதனாலேயாகும். அதனால் தான் அவை வளர்ச்சியடைந்து வரும் நாடாகவே மட்டும் இன்றுவரை இருந்து வருகின்றன.

இந்து சமுத்துரத்தின் முத்தென விழிக்கப்பட்ட இலங்கை இன்று இந்து சமுத்திரத்தின் மத்தியில் வழி பிதுங்கி அழிந்திருப்பற்கான சூட்சிமம் தேடினால் அதன் விடை அரசியலமைப்பு சட்டமாக மட்டும் தான் இருக்கும்.

இலங்கையில் வெள்ளையர் ஆட்சியின் பின் அனைத்து இன,மத குழுமங்களும் சம உரிமை அந்தஷ்து வழங்கியிருந்தால் நாடு பற்றி எரிதல் நடந்தேறியிராது. தமிழர் என்ற இனம் இங்கு ஆயுதத்தை ஏந்தியிராது. மாறாக இலங்கையின் சுதந்திர தின படை ஊர்வலத்தில் தமிழ்படைகளும் நவீன ஆயுதமேந்தி அணிவகுத்திருந்திருப்பார்கள்.
அன்று அரசியலமைப்பு சிறப்பாக இருந்திருந்தால் இன்று இலங்கை என்பது உலக வல்லரசில் ஒரு அங்கமாக இருந்திருக்கும். ஆனால் எல்லாமுமே தலைகீழாகி விட்டிருக்கிறது.வரலாற்று பிழைகளால்.

வெள்ளையரால் கூட அவ்வப்போது அதிகாரங்களை பிரித்து வழங்குவதற்க்காக மனிங்,டொனமூர்,சோல்பரி என காலத்துக்கேற்றாற் போல் அரசியலமைப்புக்களை சீர்செய்து பிரச்சனைகளை சரிசெய்து கொண்டது.

ஆனால் இலங்கை பெயரளவில் சுதந்திரம் பெற்ற பின் சிங்களவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதனால் நாடு அகல பாதாளத்துக்குள் அடியெடுத்து வைத்தது.இனப்பிரச்சனையாக உருவெடுத்து பின் நடந்தவை நான் சொல்லிப் புரிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.

இன்று அவ்வாறானதொரு வரலாற்று காலகட்டத்தில் வந்து நிற்கிறது இலங்கை. அரசியலமைப்பு சீர்திருத்தம் எனனும் தன் முதுகெலும்பை நிமிர்த வைத்தியம் செய்கிறது. ஆனால் அந்த வைத்தியம் வெற்றியளிக்குமா? என்ற கேள்வி அனைத்து தரப்பிடமும் இருக்கிறது. இலங்கை கடந்து வந்த கசப்பான பாதைகளையும் அனுபவங்களையும் தொலைத்து தலைமுழுகி நாட்டை அபிவிருத்தியில் இட்டு செல்ல தமிழர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதை வரவேற்றாலும் ,ஏதாவதை கொடுப்பதற்க்கப்பால் அவர்கள் விரும்பியவற்றை கொடுத்தாலே நாடு வளர்சிப்பாதையில் செல்லும் பகைமைகள் வேற்றுமைகள் மறைந்து போகும்.

ஆனால் அதற்கு வரப்போகும் அரசியலமைப்பு வழி வகுக்குமா?
அரசமைப்பு வரையும் போதே "சமஷ்டி" என்பது சிங்களத் தரப்புக்கு வேப்பங்காயாகவே இருந்து வந்துள்ளது.விடுதலைப் புலிகள் காலத்தில் "சமஷ்டி"யை தர தயாராகவிருந்த அரச தரப்பு இப்போது சமஷ்டி என்பதை ஏன் தூசண வார்த்தையாக பார்கிறது?
சமஷ்டி என்ற வார்த்தை அரசியலமைப்பு மாற்றத்துக்கே வேட்டு வைத்துவிடும் என்பதால் அரசு சமஷ்டி என்பதை பாவிப்பதை தவிர்க்க முன்வந்தது அதனை தமிழ்தேசியக்கூட்டமைப்பும் தன் தேர்தல் விஞ்ஞாபன பரப்புரை மரபிலிருந்து விலகி ஏற்க தலைப்பட்டது. வார்த்தை தானே வாதம் ஆக வார்த்தையை மறைப்போம் என்ற பேர்முடா முக்கோண மாய உத்தியை பயன்படுத்தினர். சமஷ்டி என்பதற்க்கு பதிலாக "ஒற்றையாட்சி" என்று பெயர் ்பொருத்தம் பெற அதற்கும் கருத்து வேறுபாடுகள் வலுப்பெற "ஏக்கிய ராச்சிய" என்று அடிக்கோடிட்டு புது அர்த்தம் புகுத்தப்பட்டது. உண்மையில் அரசியலமைப்பில் அனைத்து தரப்பையும் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தமாகவே வார்த்தை பிரயோகங்கள் அமைய வேண்டும். ஒரு வார்த்தை பிரயோகத்தை கூட ஏற்றுக்கொள்ளாத இனத்திடமிருந்து எவ்வாறு உரிமைகளை பெற்றுக்கொள்வதென்பது இங்கு தொக்கு நிற்கிறது. பெரும்பாண்மையினம் வார்த்தையில் கூட நல்லிணக்கம் புரிந்துணர்வு பெறாத போது இன நல்லிணக்கம் எவ்வாறு சாத்தியமாகும் என்பது மாபெரும் கேள்வியாகும்.

தமிழில் ஒரு விளக்கமும் சிங்களத்தில் ஒரு வார்த்தை பிரயோகமும் இருப்பது எவ்வாறான மோசமான ஏமாற்று விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதற்கு வரலாற்றை புரட்டிப்பார்க இலங்கை வரலாற்றில் பின்னோக்கி உங்களை கூட்டி செல்ல போகிறேன்.
1638 ல் இலங்கையை ஒல்லாதர் ஆட்சி செய்த போது ஒல்லாந்த பிரதானி "வெஸ்ரவல்" க்கும் 2ம் இராசசிங்கனுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வெஸ்ரவல் இணக்கப்பாட்டு ஒப்பந்தமானது ஒல்லாந்த மொழெயில் எழுதப்பட்டது. அதன் கருத்துருவாக்கம் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. ஆனால் ஒல்லாந்த மொழியில் இருந்த ஒப்பந்த்தில் இருந்த விடயங்கள் அனைத்தும் சிங்கள மொழி ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. அதனால் நிலமைகள் தலைகீழாகின.

அவ்வாறான நிலமை போன்றதொரு நிலமையில் இன்றைய அரசியலமைப்பு இணக்கப்பாடும். சிங்களத்தில் "ஏக்கிய ராச்சிய"என்ற சொற்பதமும் தமிழில் வேறொரு சொற்பதமும் வரலாற்று தவறுகளை மீளவும் உருவாக்காமல் விட்டால் நன்று.
அதற்கப்பால் இணக்கம்,சம உரிமை பெறுவதற்கான அரசியலமைப்பு வரைபில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பது பல சமயத்தவர் வாழும் இலங்கையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இருந்துதான் பார்க்க வேண்டும். இந்துவத்துவம் பேசும் இந்தியாவே (பேரிலேயே இந்து வை கொண்ட நாடு) மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்து முன்னேறி செல்கிறது.

அதைவிட நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க தலைப்படும் அரசியலமைப்பு ஏன் தன் நாட்டு சனாதிபதியாக வர கட்டாயம் பௌத்தனாகவும் சிங்களவனாகவும் இருக்க வேண்டும் என்கிறது?. இது அடிப்படைவாதத்திலேயே பிழையாகிறதே! கருப்பினத்தை அடக்கியாண்ட அமெரிக்க வல்லரசே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கறுப்பின சனாதிபதியையும் (ஒபாமா)கண்டுவிட்டது. ஆனால் இலங்கை???

ஆக இலங்கை அரசியலமைப்பு எனும் முதுகெலும்பு இடையில் பார்க வேண்டிய வைத்தியமல்ல. மாறாக முதுகெலும்புகள் அனைத்தையும் களட்டியெடுத்து அடிப்படையிலிருந்து சரியாக பொருத்தி வந்தாலே இலங்கையில் நிலையான நல்லிணக்கமும் சமத்துவமும் ஏற்ப்பட்டு நாடானது சுபீட்ச பாதையில் முன்னேறும்.
இன நல்லிணக்கம் ஏற்ப்படாலே நாட்டு வளர்சியில் ,அதிகாரத்தில் ,பொருளாதாரத்தில் தமிழர்களும் பங்கெடுத்து நாட்டை சீர்தூக்கி வைக்க முடியும்.
இல்லையேல் இன்றுவரையுள்ள இலங்கையின் கடன் தொகையான 12 ரில்லியன் அமெரிக்க டொலர்($12000000000000) இன்னும் பல மடங்காகலாம்.

#மாற_வேண்டியது_மனங்களே

நன்றி
கு.மதுசுதன் B.Sc, M.Sc
University of Jaffna


21.11.2017


Previous Post Next Post