ஏறாவூர் பொதுச்சந்தை வர்த்தகர் நலன்புரிச் சங்கக்கூட்டத்தில் அமளி!

ஏறாவூர் பொதுச்சந்தை வர்த்தகர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத்தெரிவு பெரும் அமளிதுமளி மற்றும் கைகலப்பிற்கு மத்தியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தற்காலிக சந்தை வளாகத்தில் புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.எஸ்.அலியார் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

முந்திய நிருவாகம் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதாகவும், புதிய நிருவாகம் உத்வேகத்துடன் செயற்படுமெனவும் புதிய தலைவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் ஏறாவூர்- பொதுச்சந்தை நலன்புரி சங்கத்திற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் பெயர் பட்டியல் ஒன்றை பகிரங்கமாக அறிவிப்பதற்கென்றே இரண்டு நாள் கால அவகாச அறிவிப்பில் இக்கூட்டம் கூட்டப்பட்டது.

பொதுக்கூட்டமின்றி நடைபெற்ற அவ்வாறான நிருவாகத்தெரிவு சட்டவிரோதமானதென உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததையடுத்து கூட்டத்தில் அமளிதுமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மற்றுமொரு புதிய நிருவாகத்தைத் தெரிவு செய்ய சபையில் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறிருப்பினும் தற்போது நடைபெற்றுள்ள புதிய நிருவாகத் தெரிவிலும் பொது அமைப்புக்களுக்கான விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லையென குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.

14 நாட்களுக்கு முன்னர் பொதுக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும். இவ்வழைப்பு பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிருவாகமே கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்யப்படவேண்டும் என்பது பொதுவான விதியாகும்.

ஆனால் பொதுக்கூட்டமின்றி பெயரிடப்பட்ட பட்டியலொன்றை கலாசார திணைக்களத்தில் பதிவு செய்தமை சட்டவிரோதமானதென இக்கூட்டத்தில் உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. இப்பிரதேச அரசியல்வாதியொருவரின் பின்புலத்தில் இவர்கள் தவறாக வழிநடாத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

 
Previous Post Next Post