யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் கடமையேற்ற 3 வருடத்தில் 31 பேருக்கு தூக்கு!


யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் கடமையேற்ற கடந்த மூன்று வருட கால பகுதியில் 31 பேர் மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு நீதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. யாழ் மேல் நீதிமன்றினால் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41பேருக்கு மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்ற புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இது வரையிலான கால பகுதியில் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக கே.பி.எஸ்.வரதராஜா, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக எஸ்.தியாகேந்திரன், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக பி.ஸ்வர்ணராஜா, 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக ஆர்.ரி.விக்னராஜா, 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக எஸ்.பரமராஜா, 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக ஜெ.விஸ்வானந்தன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக அ.பிறேமசங்கர் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதியாக திருமதி கே.சிவபாதசுந்தரம், ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றியுள்ளதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இன்று வரையில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி வருகிறார்.

மேற்குறிப்பட்ட நீதிபதிகளின் சேவைக்காலப் பகுதியிலேயே மேற்குறித்த 41 பேருக்குமரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 – 2008, மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தலா ஒருவருக்கும், 2012 ஆம்ஆண்டு 2 பேருக்கும், 2013 ஆம் ஆண்டு ஒருவருக்கும், 2014 ஆம் ஆண்டு 4பேருக்கும், 2015 ஆம் ஆண்டு 8 பேருக்கும், 2016 ஆம் ஆண்டு 11 பேருக்கும் 2017ஆம் ஆண்டு 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று , சட்டமா அதிபர் திணைக்களத்தால் எதிரிகள் காணப்பட்டு , மேல் நீதிமன்றில் குற்ற பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் அதன் பின்னர் மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் மன்றினால் காணப்படுவார்கள். அதில் மரண தண்டனை குற்றவாளிகளாக கானப்படுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

நாட்டின் ஜனாதிபதி தீர்மானிக்கும் இடத்தில் , குறிக்கும் காலத்தில் குற்றவாளிக்கு கழுத்தில் சுருக்கிட்டு உயிர் பிரியும் வரையில் தூக்கிலிடபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post