அனுபவித்தால்தான் அவஸ்தை புரியும்


சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய்ப் பிரச்சினை வரும் கவுண்டமணியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருப்போம். உண்மையில் மாலைக்கண் நோய் என்பது சிரிப்புக்கு உரியதல்ல. பகல் முழுவதும் பளிச்செனத் தெரியும்.

கொஞ்சம் இருட்டினாலும் உலகம் தெரியாது. அதை அனுபவித்தவர்களுக்குதான் அந்தப் பிரச்சினை புரியும்.... இந்தப் பிரச்சினை ஏன் வருகிறது? இதைத் தவிர்க்க முடியுமா?

நம் கண்ணுக்குள் இரண்டு பிக்மென்டுகள் உள்ளன. ஒன்று கோன்ஸ் பிக்மென்ட்ஸ் (Cones Pigmets) மற்றொன்று ரொட்ஸ் பிக்மென்ட்ன்ஸ் (Rods Pigments), கோன் பிக்மென்ட்ஸ் பகலில் வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் நிறங்களை அடையாளம் காண்பதற்கும் பயன்படுகின்றன ரொட் பிக்மென்ட் என்பது இரவில் மங்கிய வெளிச்சத்தில் பார்க்கத் தேவைப்படுகிறது. ரொட் பிக்மென்டில் குறைபாடு ஏற்படும் போதுதான் மாலைக்கண் பிரச்சினை ஏற்படுகிறது.

இது விட்டமின் குறைபாட்டினால் ஏற்படுவதில்லை. இதற்கும் வாழ்க்கை முறைக்கும் கூட சம்பந்தம் இல்லை. இது மரபுவழியாக வரும் ஒரு பிரச்சினைதான் என்கிறது மருத்துவ உலகம். ஏற்கனவே இந்தப் பிரச்சினை இருந்தால், சொந்தத்தில் திருமணம் செய்யும்போது வாரிசுகளுக்கும் ஏற்படும்.

முதல் டிகிரி எனப்படும் நெருங்கிய சொந்தத்தில் மட்டுமல்ல.... இரண்டாவது டிகிரி எனப்படும் ஒன்றுவிட்ட சொந்தத்தில் திருமணம் செய்தாலும் இப்பிரச்சினை ஏற்படும் . மாலைக்கண் பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.

4 ஆயிரம் நபர்களில் ஒருவர் என்ற விகிதம் . பிரச்சினை பிறக்கும்போதே மரபணுவில் இருந்தாலும், சிறுவயதில் வெளிப்படுவதில்லை. பெரும்பாலும் 90 முதல் 95 சதவிகிதம் வரை, 25 வயதுக்கு மேல்தான் தெரியவரும். கொஞ்சம் கொஞ்சமாக மாலைக்கண் நோய் ஏற்பட்டிருப்பதை உணர ஆரம்பிப்பார்கள்.

அரிதாக 20 வயதுக்குள்ளும் வெளிப்படுவதுண்டு. இந்தப் பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு அதற்குரிய கண்ணாடிகள் (Low vision aids) அளிக்கப்படும். ஒமேகா 3 மற்றும் விட்டமின் ஏ இணைப்பு பரிந்துரைக்கப்படும். இவை மட்டுமே முழுமையான தீர்வு இல்லை. நீரிழிவுக்காரர்களுக்கு நடைப்பயிற்சி எப்படி உதவியாக இருக்குமோ, அப்படித்தான் இதுவும்.

30 வயதில் ஆரம்பிக்கும் இருள், வாழ்நாள் முழுவதும் தொடரும். முதுமைப்பருவத்தில் மேலும் மேலும் அதிகரிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக கண் ஓரத்தில் பார்வைக் குறைபாடு ஏற்படும்.

பிறகு, நடுப்பகுதியிலும் பார்வைக் குறைபாடு ஏற்படும். இந்தக் குறைபாட்டைத் தள்ளிப்போட இந்த இணைப்புகள் உதவும். பாரம்பரியத்திலேயே பிரச்சினை இருப்பவர்கள் திருமணத்துக்கு முன் ஜெனிடிக் கவுன்சலிங் எடுப்பது நல்லது.

சொந்தத்தில் திருமணம் செய்தால் எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினை வாரிசுகளைத் தாக்கும் அபாயம் இருக்கிறது என்பது போன்ற விபரங்களை ஆராய்ந்து, அதன் பின் விளைவுகளையும் இதில் அறிய முடியும்.

வந்த பின் அவஸ்தைப்படுவதை விட வராமல் தடுப்பதே சிறந்தது. இதற்கு மருத்துவ உலகம் சொல்லும் ஒரே வழி, சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதுதான்.
Previous Post Next Post