கட்டுப்பாட்டு விலையை மீறி யாழில் தேங்காய் விற்பனை: மக்கள் பாதிப்பு!
நாடு முழுவதும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையாக 75 ரூபாவை இலங்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்திலும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் வியாபார நிலைய உரிமையாளர்கள் அரசாங்க அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ள போதும் அதனையும் மீறி யாழில் தேங்காயொன்றின் கூடிய விலையாக 90 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

யாழ். மாவட்டத்தின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் இன்றைய(12) விலை நிலைவரப்படி, பெரிய தேங்காயொன்று 85 ரூபாவாகவும், நடுத்தரத் தேங்காயொன்று 80 ரூபாவாகவும், சிறிய தேங்காயொன்று 70 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன.

தேங்காயைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யுமாறு யாழ். மாவட்டச் செயலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகளால் தாம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் யாழ். மாவட்டத்தில் தேங்காய்க்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்குத் தம்மால் விற்பனை செய்ய முடியாதுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாகத் தற்போது சந்தைக்கு குறைந்தளவான தேங்காய்களே எடுத்து வரப்படுவதாகவும், தேங்காய் உற்பத்தியாளர்கள் தம்மால் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களுக்குத் தாமே அதிகரித்த விலையைத் தீர்மானிப்பதால் தம்மால் கட்டுப்பாட்டு விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்திலுள்ள ஏனைய சந்தைகளிலும் 85 ரூபா வரை தேங்காய் விற்பனை செய்யப்படுவதுடன், ஏனைய வியாபார நிலையங்களிலும், தனிநபர்களாலும் 90 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நெருங்கும் இவ்வேளையில் கட்டுப்பாட்டு விலையையும் மீறித் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post