ஜல்லிக்கட்டு : மாடு முட்டி ஒருவர் மரணம்!
இன்று (ஜனவரி 15) நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. இதில், 1,002 காளைகளும், 1,188 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியைத் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், விலங்குகள் நல வாரிய முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் தொடங்கிவைத்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக, 12 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். இவர்கள் பார்வையிடுவதற்காக தடுப்புகளுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் அமராமல் சிலர் மாடுகள் வெளியே சென்று சேருமிடத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

இந்நிலையில், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் மீது மாடு முட்டியதில் அவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து(19). இவர் ஜல்லிக்கட்டைப் பார்க்க 10க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பாலமேடு வந்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகள் வெளியே வரும் இடத்தில் நின்று அவர் வேடிக்கை பார்த்தபோது, 4 காளைகள் சேர்ந்து வந்துள்ளது. அப்போது ஒரு காளை, காளிமுத்துவை வயிற்றுப் பகுதியில் முட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து, காளிமுத்துவை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே காளிமுத்து உயிரிழந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. போட்டியில் 460 காளைகள் காலத்தில் அவிழ்ந்து விடப்பட்டன. நேரம் இல்லாத காரணத்தால் 300 காளைகள் அவிழ்த்து விடப்படவில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்த மணி என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதிக நேரம் களத்தில் நின்று விளையாடிய சிறந்த 7 காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் மொத்தமாக 23பேர் காயமடைந்தனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின் படிதான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது என எஸ்.கே.மிட்டல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post