மின்குமிழ் இணைத்து பட்டம் ஏற்றும் முயற்சி தோல்வி. மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!
மின் குமிழ் ஒளிரவிடப்பட்ட பட்டம் ஏற்றிய போது பட்டம் மின் கம்பத்துடன் சிக்கி ஏற்பட்ட விபத்தால் மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் புத்தூர் கிழக்கு அரசடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தர்சன் ( வயது 19) என்ற உயர்த்தரப் பிரிவில் இந்த ஆண்டு பரீட்சை எழுதவிருந்த மாணவனே உயிரிழந்தார்.

"மின்குமிழ் ஒளிர விடப்பட்ட பட்டத்தை மாணவன் ஏற்றினார். அது வீதியிலிருந்த மின்கம்பத்தில் சிக்கி மின்னிணைப்பு கம்பிகளில் சிக்கிக் கொண்டது. அதனால் மாணவனுக்கு மின்சாரம் தாக்கியது.
மாணவனை உறவினர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது" என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூற்று விசாரணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆவரங்கால் பகுதியில் நேற்றுமுன்தினம் பட்டம் விட்டு விளையாடிய 11 வயதுச் சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post