தயா மாஸ்டர் மீது தாக்குதல்..!யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளரைத் தாக்கியதுடன், கத்தியால் குத்தவும் முற்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது.சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய தொலைகாட்சி நிறுவனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

“யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள குறித்த நிறுவனத்துக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபரொருவர். செய்திப் பிரிவுப் பணிப்பாளரை கதிரையால் தாக்கி கத்தியால் குத்த முற்பட்டார். எனினும் நிறுவன ஊழியர்கள் சுதாகரித்து பணிப்பாளரை காப்பாற்றினர். அதனை தொடர்ந்து குறித்த நபர் நிறுவனத்திலிருந்து தப்பி ஓடினார். ஊழியர்கள் அந்த நபரைத் துரத்திப் பிடித்தனர்.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதலாளியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வேலாயுதம் தயாநிதி என்ற தயாமாஸ்ரர், விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்தவர். இறுதி யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த அவர் புனர் வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஊடகத்துறையில் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post