வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம்


கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தை, இன்று திங்கட்கிழமை காலை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்கால் அருகே விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி நீரேந்தும் குளத்திற்கு செல்லும் குறித்த கால்வாயானது மிகவும் ஆழமானதென தெரிவிக்கப்படுகிறது. குழந்தை தவறி விழுந்த பின்னர் அதனை மீட்க முயற்சித்த போதும், சுமார் 150 மீற்றருக்கு அப்பால் குழந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. குற்றுயிருடன் குழந்தை மீட்கப்பட்டபோதும், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியிலும் நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post