யாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், வவுனியா மேல் நீதிமன்றப் பதிவாளராக இடமாற்றம் பெற்றுள்ளார்.

நீதிமன்றப் பதிவாளர் தரம் ஒன்றில் உள்ள தமிழ் பேசும் ஒரே ஒருவரான அவர், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த நீதிமன்றப் பதிவாளர்கள் இடமாற்றத்தில் வவுனியா மேல் நீதிமன்றப் பதிவாளராக மாற்றம் பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளராகக் கடமையேற்ற அவர், கடந்த நான்கரை ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்ட மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயத்துக்கு (ட்ரயல் அட் பார்) திருமதி மீரா வடிவேற்கரசன் பதிவாளராகக் கடமையாற்றினார்.

21 வருடங்கள் நீதிமன்றப் பதிவாளராகக் கடமையாற்றும் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் மீளவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளராகக் கடமையாற்றியுள்ளார்.

நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், வவுனியா மேல் நீதிமன்றப் பதிவாளராக நாளை நடைமுறைக்கு வரும் நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளராக மன்னார் மேல் நீதிமன்றப் பதிவாளர் ஜெயரஞ்சன் இடமாற்றப்பட்டுள்ளார்.

Previous Post Next Post