மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறாரா அங்கஜன்?: தெரிவுசெய்யப்படாத வீதிகளிற்கும் அடிக்கல்!

யாழில் அபிவிருத்தியென்ற பெயரில் அண்மை நாட்களாக அங்கஜன் இராமநாதன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முறையற்ற- வெறும் தேர்தலை இலக்காக கொண்ட நடவடிக்கையென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

கடந்த சில தினங்களாக ஓயாமல் ஓடியோடி அங்கஜன் அடிக்கல் நாட்டும் வீதி அபிவிருத்தி திட்டங்களில் அனேகமானவை இன்னும் ஒப்புதல் பெறாதவை, திட்ட நடைமுறைக்குட்பட்டு தெரிவு செய்யப்படாதவை என்பதை தமிழ்பக்கமும் சுயாதீனமாக அறிந்தது.

சப்ரிகம திட்டத்தின் நடைமுறையின்படி கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மக்களின் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் ஊடாக பிரதேச செயலங்கள் ஊடாகவே திட்டங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

எனினும், குடாநாட்டின் சகல பகுதிகளிலும் இந்த நடைமுறை மீறப்பட்டு, அங்கஜன் இராமநாதன் குழுவினரின் விருப்பு வெறுப்பிற்கு இணங்க அபிவிருத்திக்குரிய வீதிகள் தெரிவு செய்யப்படுவதாக விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.அபிவிருத்திக்காக தெரிவாகும் வீதிகள் பிரதேசசபைக்குரியவையே. இதனால் இந்த அபிவிருத்தி நடைமுறை பிரதேசசபைகள் ஊடாக, அதன் நடைமுறைகளிற்கிணங்க செயற்படுத்தப்பட வேண்டியது. எனினும், இந்த நிர்வாக நடைமுறை மீறப்பட்டே வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் என அங்கஜன் இராமநாதன் அடிக்கல் நாட்டியிருந்தார். எனினும், கரவெட்டி பிரதேசசபையினால் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகள் பற்றிய பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

சபரிகம திட்ட நடைமுறைக்கு குறிப்பிட்ட வீதி உள்ளடங்குகிறதா, வீதியில் தனியார் காணிகள் உள்ளடங்குகிறதா, முறைப்படியான குழுவினரால் அந்த வீதி தெரிவு செய்யப்பட்டதா உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் அபிவிருதிக்குரிய வீதிகள் தெரிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

எனினும், தனது குழுவினர் ஊடாக ஒரு பட்டியலை தெரிவு செய்து அங்கஜன் இராமநாதன் அங்கு பல வீதிகளிற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

கரவெட்டி பிரதேசசபையினால் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்போது, அங்கஜன் இராமநாதன் அடிக்கல் நாட்டிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

பிரதேசசபை ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டத்தை, எதிர்வரும் தேர்தலை குறியாக கொண்டு அங்கஜன் தன்னிச்சையாக செயற்படுத்தி, பிரதேசசபைக்கும் மக்களிற்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்.

மக்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டுமென யாழிலுள்ள பல பிரதேசசபைகளின் பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அங்கஜன், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியையும் இழப்பார். இதற்கு முன்னதாக அவசரகதியில் அடிக்கல் நாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட கரவெட்டி, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கரவெட்டி மூத்த விநாயகர் ஆலய திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட பிரதேசசபைகளின் தவிசாளர்கள் அழைக்கப்படவில்லை. திணைக்களங்களின் பிரதானிகள் கலந்து கொள்ளவில்லை.

மாவட்ட செயலகத்தில் இருந்து மட்டும் இரண்டு அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். யாழ் மாவட்டம் முழுவதும் இதேவிதமான ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் நடந்து வருகிறது.

இவற்றிலும் பிரதேசசபை தவிசாளர்கள் அழைக்கப்படுவதில்லை. திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொள்வதில்லை. இது தேர்தலை இலக்காக கொண்ட வெறும் அரசியல் கூட்டம் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளது.

தமது பகுதி பிரச்சனைகளை, அங்கஜனிடம் அந்த மக்கள் தெரிவிக்கலாம் என்பதை தவிர, இது முறைப்படியான- தீர்மானங்களை எடுக்கவல்ல ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் அல்ல.

இது குறித்து, அங்கஜன் இராமநாதன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
எனினும், இந்த அடிக்கல் நாட்டல், ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களினால் சம்மந்தப்பட்ட மக்களிற்கு பலனெதுவுமில்லையென்றே தெரிகிறது.

-pagetamil-
Previous Post Next Post