முதலில் நிபா வைரஸ்... தற்போது கொரோனா: மூன்று முறை முடங்கியும் நம்பிக்கை கைவிடாத இளம்காதலர்கள்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ், பெருவெள்ளம் காரணமாக தள்ளிப்போன இளம்காதலர்களின் திருமணம் தற்போது மூன்றாவது முறையாக கொரோனாவால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டtஹ்தை சேர்ந்தவர்கள் பிரேம் சந்திரன்(26) மற்றும் சந்திரா சந்தோஷ்(23).

சிறார் பருவத்தில் இருந்தே ஒன்றாக பழகி வந்துள்ள இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் பிரேம் மற்றும் சந்திராவுக்கு 2018 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால், அந்த சமயத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 17 பேர் உயிரிழந்தனர்.நிபா வைரஸ் காரணமாக மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டதால் 2018 மே 20 ஆம் திகதி நடைபெறவிருந்த திருமணம் முதல்முறையாக தள்ளிவைக்கப்பட்டது.

நிபா வைரஸ் தாக்கம் குறைந்ததையடுத்து அடுத்த மாதமே உடனடியாக திருமணத்தை நடத்த குடும்பத்தார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இவர்களின் குடும்பத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பிரேம்-சந்திரா திருமணம் மீண்டும் தடைபட்டது.

இதைத்தொடர்ந்து, இருமுறை தடைபட்ட திருமணத்தை கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின் போது மீண்டும் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளம் புரட்டி எடுத்தது. இந்த இயற்கை பேரிடர் காரணமாக காதல் ஜோடி திருமணம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், திருமண முயற்சியை கைவிடாத பிரேம்-சந்திரா ஜோடி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கூட்டமாக கூட தடைவிதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 20 ஆம் திகதி நடைபெறவிருந்த இவர்களின் திருமணம் மூன்றாவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எத்தனை தடைகள் வந்தாலும் பிரேம்-சந்திரா தம்பதிகளின் திருமணம் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பது அவர்களது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Previous Post Next Post