நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது எப்படி..? கடைசி திக் திக் நிமிடங்கள்..!

நாட்டு மக்களையே நிம்மதி அடைய செய்த நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2012-ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் பயணம் செய்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த 6 பேரில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்னொருவர் சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 4 குற்றவாளிகளான அக்ஷய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில் திகார் சிறை வாயிலில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர். இந்த தண்டனை நிறைவேற்றப்பட்ட கடைசி நேர தகவல்களை பார்ப்போம்.

அதிகாலை 4 மணி- 4 குற்றவாளிகளும் எழுப்பப்பட்டு குளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

4.15 மணி- தங்கள் மதங்களின் புனித நூல்களின்படி தயாராக நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் கடைசியாக சிற்றுண்டி கொடுக்கப்பட்டது.4.30 மணி- தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னர் அவர்கள் 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படியான கடிதமோ அறிவிப்போ ஏதேனும் வந்துள்ளதா என சிறைத் துறை கண்காணிப்பாளர் சரிபார்த்தார். அது போல் எந்த ஆவணங்களும் வரவில்லை.

5.20 மணி- 4 பேரின் முகத்திலும் துணி போர்த்தப்பட்டது. பின்னர் கைகள் கட்டப்பட்டது. அவர்கள் 4 பேரும் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த சமயத்தில் மற்ற குற்றவாளிகள் யாரும் வெளியே வர அனுமதி வழங்கப்படவில்லை.

5.25 மணி- தூக்கு மேடைக்கு வந்தவுடன் அங்கிருந்த குற்றவியல் நீதிபதி 4 பேரின் கடைசி ஆசையையும் கேட்டார். மேலும் தூக்கிலிடும் போது அவரவர் மத நம்பிக்கையின் படி மதத் தலைவரை அழைத்து வர தயாராக இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது. ஆனால் அதை 4 பேரும் மறுத்துவிட்டனர். பின்னர் தூக்கு தண்டனைக்கான ஆவணத்தில் குற்றவியல் நீதிபதி கையெழுத்திட்டார்.

5.40 மணி- 4 பேரின் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

5.40 மணி- 4 பேரும் தூக்கிலிடப்பட்டதை திகார் சிறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் உறுதிப்படுத்தினார்.

6 மணி- 4 குற்றவாளிகளும் இறந்துவிட்டனரா என்பதை மருத்துவ அதிகாரி மூலம் சோதிக்கப்பட்டது. அது உறுதி செய்யப்பட்டவுடன் அவர்களது உடல்கள் கீழே இறக்கப்பட்டன.

7 மணி- 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

8 மணி- பிரேத பரிசோதனை தொடங்கியது. இது முடிந்தவுடன் அவர்கள் சிறைத் துறை சட்டத்தின்படி அவர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்த 4 பேரின் உடலை வாங்கிக் கொள்கிறார்களா என குடும்பத்தாரிடம் கேட்கப்படுவர். அவர்கள் ஆம் என்றால் உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் சிறைத் துறை அதிகாரிகளே அவர்களுக்கு ஈமச்சடங்கை செய்து விடுவர். இதுதான் நடைமுறை.
Previous Post Next Post