பெருகிவரும் கொரோனா: இத்தாலியை மிஞ்ச போட்டி போடும் நாடுகள்!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பெருகிவரும் நிலையில், இத்தாலியின் Lombardy நகரை, பிரித்தானியாவின் லண்டனும், ஸ்பெயினின் மாட்ரிட் நகரமும் மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் 415,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, 18,574 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் திடீரென அதிகரித்தவண்ணம் உள்ளது.

கொரோனா பிறந்த சீனாவின் வுஹானை மிஞ்சியது இத்தாலியின் Lombardy நகரம். அங்கு செவ்வாயன்று 743 பேர் பலியானதையடுத்து, கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6,820 ஆனது.இத்தாலியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் எட்டு சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளதையடுத்து, இத்தாலிய அதிகாரிகள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பலன் தரத் தொடங்கியிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில், பிரித்தானியாவின் லண்டனிலும், ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்திலும் இரண்டு நாட்களுக்கொருமுறை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருவதையடுத்து, அவை அடுத்த கொரோனா மையங்களாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பிரித்தானியாவில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் இறப்பு எண்ணிக்கை ஒரு வார காலத்தில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் 40,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 2,700ஐத் தொட்டுவிட்டது.

ஆகவே, கொரோனாவை எதிர்த்துப் போராட NATOவின் உதவியை ஸ்பெயின் நாடியுள்ளது. மாட்ரிட் நகரில் மட்டும் 12,352 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள், இது மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,535, இது மொத்த மக்கள் தொகையில் 57 சதவிகிதமாகும். ஆனால், இந்த இரு நகரங்களையும் மிஞ்சிவிடும்போல் உள்ளது அமெரிக்காவின் நியூயார்க்.

இதற்கிடையில், சீனாவின் தொற்று எண்ணிக்கையையும் அமெரிக்கா மிஞ்சிவிட வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்கள் சுகாதாரத்துறை நிபுணர்கள். ஏனென்றால், அமெரிக்காவில் கடந்த வாரத்தில் சீனாவை விட அதிகம்பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
Previous Post Next Post