கொரோனவால் பேரக்குழந்தைகளிடம் இருந்து பிரித்த தாத்தா பாட்டி... கண்ணீரை வரவழைக்கும் ஒரு புகைப்படம்!

பரபரவென பரவி, உலகத்தில் பல மாற்றக்களை ஏற்படுத்தி விட்ட கொரோனா, குடும்ப உறவுகள் மத்தியிலும் நுழைந்து தாங்கொணா வேதனையை ஏற்படுத்திவிட்டது.

ஏற்கனவே பல நாடுகளில் முதியவர்கள், தங்கள் சொந்த பேரக்குழந்தைகளைக் கூட பிரிந்து முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படியிருக்கும் நிலையில், இந்த கொரோனா வந்து மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச தாத்தா பாட்டிகளின் வாய்ப்பையும் பிடுங்கி தூர வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட சோக உணர்வை வெளிப்படுத்தும் ஒரு புகைப்படம் வெளியாகி, காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

அந்த புகைப்படத்தில், பிரித்தானியாவின் Norfolkஐச் சேர்ந்த மூன்று வயது ப்ளாரன்ஸ் மற்றும் ஒரு வயது ஈடித், கண்ணாடிக்கு அப்பால் இருக்கும் தங்கள் தாத்தா பாட்டியின் கைகள் மீது கைவைத்து தங்கள் பாசத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.கால்பந்து கிளப் ஒன்றின் முன்னாள் இயக்குனரான ரே கோசி மற்றும் அவரது மனைவி தெரேசா இருவருக்கும் 81 வயதாகிறது.

இருவருக்கும் இரண்டு பிள்ளைகள், ஆறு பேரக்குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு எட்டு குழந்தைகள்.

தொல்லையாக, குடும்பத்தின் அன்புக்கும் பாசத்துக்கும் குறுக்கே இந்த கொடிய கொரோனா வந்ததையடுத்து, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர், ரே கோசி மற்றும் அவரது மனைவி தெரேசா இருவரும்.

முதியவர்கள் எளிதில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவார்கள் என்றும், ஆகவே குழந்தைகளை சந்திப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் பல நாடுகள் வலியுறுத்து வரும் நிலையில், எத்தனை வாரங்கள் மாதங்கள் ஆனாலும் பேரக்குழந்தைகளை சந்திப்பதில்லை என முடிவு செய்தனர் இருவரும்.

ஆனால், கடந்த செவ்வாயன்று காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென யாரோ ஜன்னலைத் தட்டுவதைக் கேட்டு வந்து பார்த்த இருவருக்கும் ஆனந்தமும் அழுகையும் கலந்த ஒரு திடீர் இன்ப அதிர்ச்சி.ஆம், பேரக்குழந்தைகளை காணாமல் வாடியிருக்கும் தன் தாத்தா பாட்டியை மகிழ்விப்பதற்காகவும், தாத்தா பாட்டியை பார்க்காமல் தவித்திருக்கும் தனது குழந்தைகளுக்கு ஆறுதலளிப்பதற்காகவும், தன் பிள்ளைகளை, அவர்களது தாத்தா பாட்டி இருக்கும் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் ரே, தெரேசாவின் பேத்தியான விக்கி (30).

எப்போதுமே தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாத்தா பாட்டி வீட்டுக்கு வருவது விக்கியின் வழக்கம்.

ஆகவே, இம்முறையும் தன் குழந்தைகளை அழைத்துவந்த விக்கி, தாத்தா பாட்டியிடம், நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லையானாலும் பரவாயில்லை, என் குழந்தைகள் வழக்கம் போல உங்கள் வீட்டு தோட்டத்தில் விளையாடட்டும் என்று தன் மன வேதனையையெல்லாம் அடக்கிக்கொண்டு கூற, தாத்தாவும் பாட்டியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போதுதான் ப்ளாரன்சும் ஈடித்தும் வீட்டிலிருக்கும் கண்ணாடி தடுப்பின் இந்த பக்கம் நின்றுகொண்டு, அந்தப் பக்கம் இருக்கும் தாத்தா பாட்டியின் கைகள் மீது தங்கள் உள்ளங்கைகளை வைத்து தங்கள் ஆதங்கத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த பிஞ்சுக் குழந்தைகளின் பாசத்தையும் பரிதவிப்பையும் பார்த்தாவது, வந்த வழியே திரும்பிப் போய்விடமாட்டாயா என இந்த கொடூர கொள்ளைநோயைப் பார்த்து கேட்கத்தோன்றுகிறது!

Previous Post Next Post