மகரத்தில் செவ்வாய்,சனி, குரு ஆகிய மூன்று கிரகங்களின் கூட்டணி! குருபகவான் இடப்பெயர்ச்சி எப்போது நிகழும் தெரியுமா?

நூற்றாண்டுகளில் இல்லாத நிகழ்வாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை தனித்தனியாக பிரித்துள்ளது.

மகரம் ராசியில் மூன்று கிரகங்கள் சேரப்போகும் நிலையில் கொரோனாவின் வீரியம் குறையுமா என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கச் சொல்லியுள்ளனர்.

ஒரு நாளில் சில மணிநேரங்கள் கூட வீட்டிற்குள் தங்காதவர்கள் இப்போது வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மகரம் ராசியில் இப்போது சனி செவ்வாய் கிரகம் சேர்ந்துள்ளது. சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் நேரத்தில் குரு நீசம் பெற்று மகரம் ராசியில் செவ்வாய் சனியோடு சேரப்போகிறார். 29ஆம் தேதி இந்த கிரகங்களின் கூட்டணி நிகழ்கிறது.

ஏற்கனவே தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் சேர்ந்தது இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்ட நிலையிலும் புதுவித வைரஸ் கோவிட் 19 தோன்றி மக்களின் உயிரை குடித்து வருகிறது.

மகரம் ராசியில் கிரகங்கள் கூட்டணி
சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி இப்போது மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் பகவான் இப்போது மகரம் ராசியில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

ஏற்கனவே செவ்வாய் சனி கூட்டணி ஒருவித போராட்ட மனநிலையை உருவாக்கும். கொரோனா வைரஸ் பற்றிய பீதி நாடு முழுவதும் மக்களிடையே ஒருவித பதற்றமும் அச்சமும் உருவாகியுள்ளது.

இந்த அச்சத்தை போக்கி நாட்டு மக்கள் ஒருவித நிம்மதி உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே 144 தடை உத்தரவு போட்டுள்ளது அரசு. ஒரு வாரம் மட்டுமே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்
இந்த சுய ஊரடங்கை கொரோனாவிற்கு எதிரான போராட்டமாக கருதவேண்டும். மக்கள் கிரகம் சனி. தன்னுடைய வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

அவருடன் பகை கிரகமான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். செவ்வாய் காவல்துறைக்கு காரகர். அவர் வீரியமாக உச்ச பலத்தோடு இருக்கிறார்.

இந்த சஞ்சாரம் பற்றி ஜோதிடர் NC கிருஷ்ணன் நாயுடு தனது கணிப்பில், கால புருஷனின் இயற்கை லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியும் உச்சம்பெற்று ஆயுள்காரகன் சனியுடன் சேருவதால், அப்போது மக்களின் ஆயுள் கண்டிப்பாக அதிகரிக்கும் ஆகையால் கண்டிப்பாக இந்த 144 மக்களின் உடல் நிலையை காக்கும் என்பது இதனுடைய மறை பொருளாகும் என்று கூறியுள்ளார்.

உத்தரவை மீறாதீங்க
அஷ்டமாபதி உச்சம் பெறுவதால், இதை மீறுபவர்களுக்கு தண்டனையும் கிடைக்கலாம் அல்லது நோய்வாய் படலாம் எப்படி வேண்டுமென்றாலும் நாம் இந்த நிலையை எடுத்துக்கொள்ளலாம்.

சனி செவ்வாய் இவர்கள் இருவருக்குள் இருக்கும் இந்த பஞ்சாயத்து, குருபகவான் மகரத்தில் அவர்களை நெருங்கும் பொழுது சற்று சுமூகமடையும்.

நல்ல விசயத்திற்கு பயன்படுத்துங்க
செவ்வாய் பகவான் உச்சம் பெற்று கால புருஷனின் இலக்கணத்தை, சுகஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். ஆகையால் உங்களுடைய பொன்னான செவ்வாய் சக்தியை, தடைப்பட்ட வீட்டு வேலைகள் செய்வதற்கு உபயோகப்படுத்தினால் உங்களது வீடு சுபிட்சம் பெறும் என்பது என்னுடைய கணிப்பு. ஆகையால் உங்களின் உடல் சக்தியையும், மன சக்தியும் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தினால்,இந்த ஊரடங்கு உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று கூறியுள்ளார்.

மூன்று கிரகங்கள் கூட்டணி
மார்ச் 29ஆம் தேதி இரவு குரு பகவான் அதிசாரமாக இடப்பெயர்ச்சி ஆகி சனி செவ்வாயுடன் இணையும் போது மக்களின் பயம் தணியும் தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்படும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

அதே போல சூரியன் தற்போது மீனம் ராசியில் இருக்கிறார். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் உச்சம் பெற்று மேஷம் ராசிக்குள் நுழையும் போது இந்த நோயின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சில ஜோதிடர்களே நவம்பர் மாதம் குருபகவான் இடப்பெயர்ச்சி என்று தெரிவித்துள்ளனர்.

வேப்பிலையும் மஞ்சளும்
மாலை நேரங்களில் வீட்டின் வாசலில் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கவும்.

வேப்பிலை மஞ்சள் கலந்து வாசல்களில் தெளிக்கவும்.

பச்சை கற்பூரத்தை ஒரு கிண்ணத்தில் வைத்திருக்கவும்.

சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கவும். தனிமையாக இருப்பதே நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழியாகும்.

 
Previous Post Next Post