ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 பேருக்கு கொரோனா

அம்பாறை ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 28 பேரில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஜா-எல நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருடன் பழகியவர்களை சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அதனை மீறி அந்த நபர்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருந்ததால், கடற்படையின் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் அவர்களை தேடி கண்டறிந்ததாகவும் சுகாதார பரிசோதகர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மேற்கூறிய 28 பேரில் இருந்த ஒரு நபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான நோய் அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக அந்த பெண் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனைகளை அடுத்து நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய நபரம் மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்கள் பிரதேசத்தில் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளதாகவும் ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றிய 13 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post