புலம்பெயர்தோர் உள்பட சகல இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புலம்பெயர்தோர் உள்பட சகல இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் சலுகைகளுடன் கூடிய புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும் இலங்கையர்களுக்கும் இரட்டை குடியுரிமையுள்ளவர்களுக்கும் ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்களுக்கும் இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளில் தாபிக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நிதியங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளுக்கும் மற்றும் இலங்கையின் அபிவிருத்தியை விரும்பும் எந்த ஒருவருக்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் சிறப்புக் வைப்புக் கணக்கை திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை வகுப்பு அமைச்சினால் ஏப்ரல் 08ஆம் திகதி அரசின் அதிசிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் புதிய வைப்பு சம்பந்தமான சட்டதிட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு வெளியே வெளிநாட்டு பண வைப்பு அல்லது முதலீட்டை பேணி வரும் அனைத்து இலங்கை வர்த்தக சமூகத்திற்கும், கம்பனி உரிமையாளர்களுக்கும் இலங்கையின் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் தமது வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி தம்மிடமுள்ள நிதியங்களின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்ப முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய கணக்கில் வைப்பிலிடக் கூடிய பணத்தின் அளவுக்கு ஆகக்குறைந்த எல்லை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

வைப்பொன்றுக்கான குறைந்த காலம் 06 மாதங்கள் என்றும், . சாதாரண வெளிநாட்டு பண வைப்புக்கு வழங்கப்படும் வட்டியைப் பார்க்கிலும் அதிக வட்டி வீதம் வைப்புகளுக்கான தவணை முடிவில் வழங்கப்படும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.

அந்த வகையில் 06மாத சிறப்பு வைப்புக் கணக்கிற்கு 1வீதமும் 12 மாத வைப்பொன்றுக்கு 2வீதமும் அதிக வட்டி உரித்தாகும் என்றும்,

வைப்புகளின் தவணை முடிவில் அதிலுள்ள பணத்தை தடையின்றி வேறு நிதிக்கு மாற்றுவதற்கும் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி உள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

அனைத்து வைப்புகளும் வரி மற்றும் அந்நியச் செலாவணி சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். வைப்புகளுக்கு வங்கியின் இரகசிய ஏற்பாடுகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கணக்கு உரிமையாளர்களுக்கு கிடைக்கும் அதிக நன்மைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் 2020 வரவு செலவுத்திட்ட ஆவணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர், யூரோ, ஸ்டர்லின் பவுன், ஆஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், சுவீடன் குரோனர், சுவிஸ் பிராங்க், கனடா டொலர், ஹொங்கொங் டொலர், ஜப்பான் யென், டென்மார்க் குரோனர், நோர்வே குரோனர், சீன ரென்மின்பி மற்றும் நியூசிலாந்து டொலர் என்பன விசேட கணக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் பணங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி அல்லது இலங்கையின் தூதுவராலயங்களின் இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் 19 நிவாரண, சமூகப் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு இலங்கையின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post