பாபா நினைத்தால்தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும்..!

கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்துவிட முடியாது. நம் மனம் பரிபக்குவம் அடைந்திருக்கிறதா என்பதை பரிசீலித்து அதன் பிறகே பாபா நமக்கு தரிசனம் கொடுப்பார். அவர் நினைத்தால்தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும். அதேபோல் மகான்களின் திருவுள்ளம் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனம் கிடைக்கும்.ஒருவருக்கு மகான் தரிசனம் தரவேண்டுமென்று நினைத்துவிட்டால், அந்த நபர் எந்த முயற்சியும் செய்யாமலேயே அவருக்கு மகானின் தரிசனம் கிடைத்துவிடும்.

ஷீரடி சாய்பாபா இவ்வாறு தன் பக்தரைத் தன் அருகில் இழுத்து அருள் புரிந்ததைப் பின்வரும் கதை நமக்குக் கூறுகிறது.

பம்பாயைச் சேர்ந்த லாலா லக்ஷ்மிசந்த் என்பவர் ஒரு நாள் இரவு ஒரு கனவு கண்டார். அதில் ஒரு முதியவர் தாடியுடன் காட்சி அளித்தார். அவரைச் சுற்றி நான்கைந்து பேர் இருப்பதுபோல் கண்டார். அவர் அதற்கு முன்பாக பாபாவைத் தரிசிக்கவில்லை, ஆதலால் அந்த முதியவர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்தார்.அந்தத் தருணத்தில் அவரின் நண்பரின் இல்லத்தில் தாஸ்கணுவின் கீர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லக்ஷ்மிசந்த்க்கும் அழைப்பு வந்திருந்தது.

தாஸ்கணு எப்போது கீர்த்தனை செய்தாலும், பாபாவின் படத்தை முன்னால் வைத்து நமஸ்கரித்துவிட்டு அதன்பிறகே செய்வது வழக்கம். லக்ஷ்மிசந்த் கீர்த்தனைக்கு வந்தபோது அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. தாஸ்கணு கொண்டு வந்திருந்த புகைப்படத்தில் இருப்பவரின் உருவத்துடன் தான் கனவில் கண்டவரின் உருவமும் பொருந்தியிருந்தது. பின்னர் அவரே ஷீரடியில் வசிக்கும் சாயிநாதர் என்பதை அறிந்துகொண்டார்.

தாஸ்கணுவின் கீர்த்தனைகளைக் கேட்டவுடன் சாயிநாதர் மீது லக்ஷ்மிசந்த்துக்கு பக்தி உண்டாகியது. ஆனால், அவருக்கு எப்படி ஷீரடிக்குச் சென்று மகானைத் தரிசிப்பது என்பது புரியாமலிருந்தது.ஆனால், பாபா லக்ஷ்மிசந்த்தைக் காண்பதற்குத் திருவுள்ளம் கொண்டுவிட்டார். அதன் பிறகு அவரால் செல்ல முடியாமல் இருக்க முடியுமா?

லக்ஷ்மிசந்த்தின் நண்பரான சங்கரராவ் ஒருநாள் லக்ஷ்மிசந்த்தைச் சந்தித்து, அவர் தன்னுடன் ஷீரடிக்கு வருகிறாரா என்று கேட்டார். இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்த லக்ஷ்மிசந்த்தும் வருவதாக ஒப்புக்கொண்டார்.ஆனால், அவரிடம் ஷீரடிக்குச் செல்வதற்குத் தேவையான பணம் இல்லை. எனவே ஒருவரிடம் பதினைந்து ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டு சங்கரராவுடன் ஷீரடிக்குப் புறப்பட்டார்.

பாபாவுக்கு சமர்ப்பிப்பதற்காக சில கொய்யாப் பழங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினார் லக்ஷ்மிசந்த். அப்படிச் செல்லும்போது பாபாவைப் பற்றி பாடல்கள் பாடிக்கொண்டு சென்றனர். அப்படி பாடுவதிலும், சுற்றி இருக்கும் இயற்கைக் காட்சிகளைக் காண்பதிலும் தன் கவனத்தைச் செலுத்தினார். அதன் காரணமாக அவர் கொய்யாப் பழங்கள் வாங்க மறந்துவிட்டார்.

வழியில் சில முஸ்லீம் பக்தர்கள் ஏறினர். அவர்களிடம் லக்ஷ்மிசந்த் பாபாவைப் பற்றி விசாரித்தார். அந்த பக்தர்களும் பாபா ஒரு சிறந்த ஞானி என்றும், அவரை ஒரு மகான் வடிவத்தில் இருக்கும் கடவுள் என்றே கூறவேண்டும் என்றும் கூறினர். இதைக் கேட்ட லக்ஷ்மிசந்த் ஆனந்தமடைந்தார்.வண்டி கோபர்காங்கை அடைந்தபோதுதான், சாயிநாதருக்கு தான் கொய்யாப்பழங்கள் வாங்க எண்ணியிருந்ததையும் ஆனால், அதை மறந்துவிட்டதையும் எண்ணி வருந்தினார். இந்தச் சிறிய விஷயத்தைக்கூட பாபா தனக்கு நினைவுபடுத்தவில்லையே என்று தன் மனதினுள் அவரைக் கடிந்துகொண்டார்.

அவர் அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு கிழவி கொய்யாப் பழங்கள் நிறைந்த கூடையுடன் அங்கு வந்தாள். அவளிடம் தன் விருப்பம் போல கொய்யாப்பழங்களை வாங்கிக்கொண்டார். அந்தக் கிழவி மீதியிருந்த பழங்களையும் அவரிடம் கொடுத்து தனது சார்பாக பாபாவிடம் அளிக்கும்படி வேண்டினாள்.

இருவரும் ஷீரடிக்குச் சென்றார்கள். துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை தரிசித்தார்கள். அவரை தரிசித்ததுமே லக்ஷ்மிசந்த் மிகுந்த பரவசமடைந்தார். பாபா லக்ஷ்மிசந்த்தையும் சங்கரராவையும் ஆசீர்வதித்தார். பின்னர் பாபா லக்ஷ்மிசந்த்தைப் பார்த்து, “இப்போதாவது என் மீது உனக்கு நம்பிக்கை ஏற்பட்டதா? ஒருவரிடம் கடன் வாங்கிக் கொண்டு என்னைத் தரிசிக்க வந்தாய். ஆனாலும், வழியில் என்னைப் பற்றி பிறரிடம் விசாரிக்கிறாய்? ஏன் பிறரை வினவ வேண்டும்? நீயே நேரடியாகத் தெரிந்துகொள்ளக்கூடாதா?’ என்று கேட்டார்.


இதைக் கேட்டவுடன் லக்ஷ்மிசந்த் மிகவும் ஆனந்தம் அடைந்தார். அவர் மீண்டும் ஒருமுறை பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, உதியுடன் ஆசீர்வாதத்தையும் பெற்றார்.

இவ்வாறு பாபா தன் பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தம்மிடம் அழைத்து ஆசீர்வதிக்கவே செய்கிறார்.
Previous Post Next Post