கொரோனா போராட்டத்தில் பிரித்தானியாவுக்காக உயிரைக் கொடுத்த எட்டு புலம்பெயர்ந்த மருத்துவர்கள்!

புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பை மையமாக வைத்துத்தான் பிரித்தானியாவில் பிரெக்சிட்டே கொண்டுவரப்பட்டது.

ஆனால், இன்று கொரோனாவால் தடுமாறிக்கொண்டிருக்கும் பிரித்தானியாவில் உயிரையும் கொடுக்க தயாராக முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் அதே புலம்பெயர்ந்தோர்!

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த எட்டு மருத்துவர்கள் இன்று கொரோனாவுக்கெதிரான யுத்தத்தில் பிரித்தானியாவுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.

புலம்பெயந்தோருக்கு எதிரான இயக்கம் பெற்றெடுத்த பிரெக்சிட்டால் பிளவுபட்டுக்கிடக்கும் ஒரு நாடு, இன்று இலங்கை, இந்தியா, எகிப்து, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான் என வெவ்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்துவந்த மருத்துவப்பணியாளர்களை நம்பியிருக்கிறது.

ஒரு பக்கம், இது இனவெறி சற்றே கலந்த ஒரு கதை என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் வெள்ளையின மருத்துவர்கள் மருத்துவத்துறையின் கௌரவமான இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ள, வெளிநாட்டு மருத்துவர்கள் கொரோனா அபாயத்தை ஏற்படுத்தும் இடங்களில் பணிசெய்கிறார்கள்.

இன்று பிரித்தானியர்கள் சாலையோரம் நின்று மருத்துவப்பணியாளர்களுக்காக கைதட்டியதைக் கண்டபோது, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதே பிரித்தானியர்கள், இந்த புலம்பெயர்ந்தவர்கள் நம் நாட்டிற்குள் வந்து நம் வேலைகளை எடுத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்று கூறி பிரெக்சிட்டைக் குறித்து பேசிக்கொண்டிருந்ததுதான் நினைவுக்கு வந்தது என்கிறார் Dr. Hisham el-Khidir.

அவரது உறவினரான Dr. Adil el-Tayar, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர், மார்ச் மாதம் 25ஆம் திகதி லண்டனில் கொரோனா தொற்றுக்கு பலியாகிவிட்டார்.

இன்று அதே புலம்பெயர்ந்தோர் உள்ளூர் மக்களுடன் தோளோடு தோள் நின்று உழைக்க முயல்கிறார்கள் என்று கூறும் அறுவை சிகிசை நிபுணரான Dr. el-Khidir, அவர்கள் கொரோனாவை எதிர்த்து போராடும் போராட்டத்தில் முன்னணியில் நின்று உயிரையும் விடுகிறார்கள் என்கிறார்.

வெளிநாட்டு மருத்துவர்களை வேலைக்கு அமர்த்துவதால் பிரித்தானியாவுக்கு அவர்களை பயிற்றுவிப்பதற்கான 270,000 டொலர்கள் மிச்சமாகிறது.

இருந்தும், வெளிநாட்டு மருத்துவர்கள் விசா செலவாக பல ஆயிரம் டொலர்களை செலவிடுவதோடு, பிரித்தானிய மருத்துவ சேவையை பயன்படுத்துவதற்காக உப கட்டணமாக 500 டொலர்களையும் செலுத்துகிறார்கள்.

அப்படியிருந்தும் எல்லா துறைகளிலும் அவர்களால் நுழைய முடிவதில்லை... முதியோர் மற்றும் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றவே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இன்று அந்த துறைகள்தான் கொரோனாவால் அதிகம் தாக்குதலுக்குள்ளாகின்றன. அந்த துறையில்தான் இந்த புலம்பெயர்ந்த வெளிநாட்டு மருத்துவர்கள், உயிரைப் பணயம் வைத்து, ஏன் உயிரையே கொடுத்து இன்று கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பிரித்தானியாவுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த புலம்பெயர்ந்த மருத்துவர்கள், சூடானியர்களான Dr Amged El-Hawrani மற்றும் Dr Adil El Tayar மட்டுமின்றி, பாகிஸ்தானைச் சேர்ந்த Dr. Habib Zaidi (76), நைஜீரியரான Dr. Alfa Sa’adu(68), இந்தியரான Dr. Jitendra Rathod (62), இலங்கையரான Dr. Anton Sebastianpillai (70கள்), எகிப்தியரான Dr. Mohamed Sami Shousha (79) மற்றும் பாகிஸ்தானியரான Dr. Syed Haider (80கள்) ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post