பொதுமக்களுக்கு விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்களில் எவருக்கேனும் இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருப்பின் எக்காரணம் கொண்டும் நேரடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்வதை தவிர்க்குமாறும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறானவர்கள் 1390 எனும் உடன் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அழைப்பை ஏற்படுத்தும் போது, வைத்திய ஆலோசனைகளை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் உரையாட முடியுமான வைத்தியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விஷேட மத்திய நிலையம் நிறுவபப்ட்டுள்ளதாகவும், அதன் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இன்று கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியமாகியுள்ளது.

இந் நிலையில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதா என சந்தேகிக்கபப்டும் நபர்களை பரிசோதிக்க விஷேட முறைகள் அமுல் செய்யப்படவுள்ள நிலையில் இதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தல், மற்றவருக்கு இந்த கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்களை தவிர்த்தல், உரிய சேவைகள் மற்றும் ஆலோசனைகளை இலகுவாக முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக விஷேட மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையத்தை 1390 எனும் உடன் அழைப்பு இலக்கம் ஊடாக தொடர்புகொள்ளலாம். இதன்போது நோய் நிலைமை தொடர்பில் சில விடயங்கள் உங்களிடம் விபரமாக கோரப்படும்.

அதன் பின்னர் உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க்கப்படும். அல்லது அவசியம் ஏற்படின் 1990 அம்பியூலன்ஸ் சேவை ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்படுகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இந் நாட்களில் இருமல், தடிமன் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருப்போர், நேரடியாக வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து 1390 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
Previous Post Next Post