கொரோனா வைரஸின் கோரம் - அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக மாறிய அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வரையிலும் இத்தாலி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,666 பேர் ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 18,849 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா தொற்றினால் 1,727,506 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 105,722 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் 506,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும், 198 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை பாரிய பள்ளம் தோண்டி புதைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களை மொத்தமாக புதைப்பதற்கு ஹார்ட் தீவில் பாரிய குழிகள் தோண்டப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏராளமான சவப்பெட்டிகளை வைக்கும் வகையில் தோண்டப்படும் அந்தக் குழிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் அடக்கம் செய்ய வசதியில்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post