தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு கிழக்கை நம்பும் ஜனாதிபதி - இராணுவத்தை களமிறக்க பணிப்பு

நாட்டின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு கிழக்கின் நெல் உற்பத்தியை மேலும் பலப்படுத்தி நாடளாவிய ரீதியில் அரிசியை நுகர்வுக்கு வழங்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கில் அதிக நெல் விளைச்சல் பகுதிகளை கண்காணிக்க இராணுவத்தை பயன்படுத்தவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயை அடுத்து நாட்டில் நிலவும் உணவு பற்றாக்குறை காரணமாக தேசிய விவசாய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனன் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டும் உணவு உற்பத்தியில் நெல் உற்பத்தியின் அவசியம், மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பவற்றையும் மக்களின் தேவையையும் கருத்தில் கொண்டும் நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும் என இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,

அதற்கமைய நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் திறக்கப்பட்டு நாட்டின் தேசிய நெல் உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் சிறிய நெல் ஆலையாளர்கள் பிரதேச செயலக அதிகார பிரிவுக்குள்ளும், நடுத்தர நெல் ஆலையாளர்கள் மாவட்ட அதிகார பிரிவுக்குள்ளும், பாரிய அளவிலான நெல் ஆலையாளர்கள் நாடு பூராகவும் தமது நெல் உற்பத்திகளை பகிர்ந்தளிக்க முடியும் எனவும் அரசாங்கம் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக நாட்டின் அரிசி தேவையினை பூர்த்தி செய்யும் விதத்தில் வடக்கு கிழக்கில் இருந்து அதிக நெல் உற்பத்தியை மேற்கொள்ளவும் வடக்கு கிழக்கில் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி உற்பத்தியை பெருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கி கிழக்கு விவசாய காணிகள் தொடர்பில் இராணுவம் வசமுள்ள தரவுகளை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக நெல் வயல் நிலங்கள் குறித்தும் அவற்றில் முழுமையாக பயன்களை பெற்றுக்கொள்ள துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நிதியத்தில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவித்து நாட்டில் சகல பகுதிகளிலும் விவசாயத்தை உடனடியாக முன்னெடுக்க விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Previous Post Next Post