வெலிக்கடை சிறைச்சாலையில் 600 க்கும் அதிகமானோர் தனிமையில்! 210 பேரின் பி.சி.ஆர். முடிவு வெளியானது

வெலிக்கடைச் சிறைசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், இதுவரை 210 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த நபருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதியுடன் தொடர்புடைய ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவருகின்றனர்.

அதற்கமைய கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்த 474 பேரும் அதன் நிர்வாக அதிகாரிகள் 131 பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலன்னறுவை பிரதேசத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரத் ஜயசிங்க தெரிவித்தார்.

அத்தோடு வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 170 கைதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைக்கைதி கந்தக்காட்டிலுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து வழக்கின் நிமித்தம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவராவார்.

மேலும் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட கைதி கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதனூடாகவே வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அங்கு குறித்த கைதியுடன் தொடர்பினைப் பேணியவர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் வேறெந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் தற்போது வசிக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் சரத் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post