கடந்த காலங்களில் ஆறுமுகம் தொண்டமானை மக்கள் சந்திக்க சென்றால்...! போட்டுடைத்தார் ஜீவன்

மாற்று கட்சியினர் என்னை விமர்சனம் செய்ய செய்ய நான் வளர்ந்து கொண்டேதான் இருப்பேன், என்னை விமர்சிப்பவர்கள் எனக்கு ஒரு தூணாக இருக்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.டிக்கோயா - தரவளை தோட்டபகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மக்களோடு இருந்த தொடர்பினை கடந்த காலங்களில் இழந்து விட்டது. ஏனெனில் எனது தந்தை முன்னாள் அமைச்சர்

ஆறுமுகம் தொண்டமானை மக்கள் சந்திப்பதற்கு சென்றால் அவரை சந்திப்பதற்கு மற்றவர்கள் உள்ளே விடுவதில்லை.

இது திட்டமிட்டு மக்களையும், தலைவரையும் பிரித்தார்கள். அநேகமான தோட்டபகுதியில் மாற்றுகட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்தோ, ஆறுமுகம் தொண்டமானை விட்டோ பிரிந்ததிற்கு ஒருபோதும் ஆறுமுகம் தொண்டமான் காரணமில்லை.

அதற்கு அவரை சுற்றி இருந்த ஒரு சிலர்தான் காரணம். அபிவிருத்தி தொடர்புபட்ட விடயத்தினை நாம் நேரடியாக கண்காணித்து இருந்தால் அபிவிருத்திகள் சிறந்த முறையில் இடம்பெற்றிருக்கும்.

இவை அனைத்தும் சிபாரிசு ஊடாக இடம்பெற்றமையால் தான் இந்த பிரச்சினைகள் எற்பட்டன. தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தினை கோரியது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல.

தமது பிள்ளைகளின் கல்விக்கும், வாழ்வாதாரத்திற்கும் தான் கோரினார்கள். நான் யாரையும் குறை கூறுவது இல்லை. சிலர் கூறுகிறார்கள் ஜீவன் தொண்டமானுக்கும், மலையகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென.

மலையகத்தில் உள்ள வீதிகள் சில இன்னமும் மோசமான நிலையிலே காணப்படுகின்றன. நான் மற்றவர்களை போல் அநாகரிகமான அரசியல் செய்யமாட்டேன். முன்னால் அமைச்சர்கள் தான் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார்கள் என நான் கூறமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post