விழுதின் ஏற்பாட்டில் பெண்வேட்பாளர்களின் தேர்தல்கால பகிர்வுகள்

யாழ்ப்பாணத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பெண் வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றது. உங்களுக்காய் எங்களது வாக்குறுதிகள் எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான பெண்வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.சிறீலங்கா சுதந்திர கட்சியின் பெண்வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம், தமிழ்த்தேசிய முன்னனியின் பெண் வேட்பாளர்களான ஞானகுனேஸ்வரி,மீரா அருள்நேசன், அனந்தி சசிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் உமா சந்திரபிரகாஷ் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சசிகலா ரவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெண்களின் பாராளுமன்றம் நோக்கிய பயணத்தில் தடையாக அமைந்திருக்கும் விடயங்களை குறிப்பிட்டு அதிலிருந்து விலகி அவர்களின் பயணம் வெற்றியடைய வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்களுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களும் தெரிவித்தனர்.

பெண் வேட்பாளர்கள் மேடைக்கு பேச அழைக்கப்படும்போது அவர்களிடம் சில வினாக்களையும் சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்கப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
பவதாரணி ராஜசிங்கத்திடம் முன்வைக்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இங்கிருக்கின்ற பெண்கள் அனைவருமே பாராளுமன்றம் செல்லத் தகுதியானவர்கள்.

அவர்கள் அத்தனைபேரையும் பாராளுமன்றம் அனுப்பிவையுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் இங்குள்ள பெண்களே பெண்களைத் தெரிவு செய்வதில்லை மாற்றம் அவர்களிடமிருந்து வரவேண்டும். ஆகவே நீங்கள் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் அதிலுள்ள ஒரு பெண்வேட்பாளருக்கு நிச்சயம் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில் இவ்வாறான ஒருங்கிணைப்பொன்றை ஆண்களிடம் ஏற்படுத்த முடியாது ஆனால் இன்று நாம் பெண்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு அதற்காக இங்கே இணைந்திருக்கிறோம். இந்த மாற்றம் எங்களால் முடியும் என்றார். நாங்கள் கட்சியால் வேறுபட்டாலும் மக்கள் தேவைகள் தொடர்பில ஒன்றுபட்டு இருப்போம் என்றார்.

மக்களிடமிருந்து மேலும் சிலகேள்விகள் எழுப்பப்பட்டன . இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பாக வினாக்கள் எழுப்பப்பட்டன. பெண்கள் அவர்களது வாழ்வாதாரம் தொடர்பில் பிரச்சனைகள் கூறப்பட்டபோது அதற்கான திட்டங்களை தான் ஈற்கனவே வகுத்துள்ளதாக குறிப்பிட்ட பவதாரணி ராஜசிங்கம் உணவு உடை உறையுள் போன்ற அடிப்படைவசதிகளே முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

பெண்தலைமைத்துவம் என்பது கணவனை இழந்த குடும்பம் மட்டுமல்ல.பொருளாதார அடிப்படையில் பெண்களை முதன்மையாக கொண்டு இயங்கும் குடும்பங்கள் பெண்தலைமைத்துவக் குடும்பம் என்ற வரையறைக்கு உட்பட்பது ஆகவே அவர்கள் தொடர்பில் அவதானித்து அவர்களுக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

மேலும் போதைவஸ்துக்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கையில் இங்கிருக்கின்ற பெண்கள் அனைவருமே தாயாக மனைவியாக நிச்சயம் போதைவஸ்துக்களுக்கு எதிரானவர்களே. அதனை நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்.அதற்கான சட்டங்கள் இலங்கை முழுவதற்குமே பொதுவானதாய் உள்ளது.

ஆனால் யாழில் இன்னும் அழுத்தம் காணாமல் உள்ளதா என ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார். பெண் வேட்பாளர்கள் இணைந்து கொண்ட இந் நிகழ்வில் அவர்களுக்கு வாக்களிப்போம் என மக்களும் வாக்குறுதி அளித்ததுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

Previous Post Next Post