கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் சாதனை படைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள்

கிளிநொச்சி - மலையாளபுரம் கிராமத்திலிருந்து முதன்முதலாக பொறியியல் பீடத்திற்கும், மருத்துவ பீடத்திற்கும் சகோதரிகள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் 2014 ஆம் ஆண்டே க.பொ.த. உயர்தரம் கொண்டுவரப்பட்டது. இதன் போது சிலர் பாரதிபுரம் பாடசாலைக்கு ஏன் கணித விஞ்ஞானப் பிரிவுகள், இங்கு இதனை ஆரம்பிப்பது தேவையற்ற வேலை என தமது வழமையான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

உயர்தரம் ஆரம்பித்ததன் பின்னர் பல மாணவர்கள் பின்தங்கிய அந்தப் பிரதேசங்களிலிருந்து பல்கலைகழகங்களுக்கு சென்றிருந்தாலும் முதற்தடவையாக பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து பொறியியல் துறைக்கும் (E2), சித்த மருத்துவ துறைக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் குடியேற்றப்பட்ட கிராமங்களே பாரதிபுரம் பாடசாலையினை சூழவுமுள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் விவேகானந்தநகர் போன்ற கிராமங்களாகும்.

இந்த நிலையில்தான் பாரதிபுரம் பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து உயர்தரம் வரை கல்வி கற்ற மலையாளபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான ஜெயராஜ் உஷாயினி பொறியியல் பீடத்திற்கும் (E2), ஜெயராஜ் ஜனார்த்தினி சித்த வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களது தந்தையான 59 வயதுடைய தங்கராசா ஜெயராஜ் கூலித்தொழிலுடன் சிறு கைத்தொழில் முயற்சியையும் செய்து வருகின்றார்.

வறுமைக்குட்பட்ட இவர்களது குடும்பத்தில் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். கடைசி பிள்ளை தற்போது உயர் தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கின்றார்.

பையிலடைத்த உணவு உற்பத்தி சிறுதொழில் உற்பத்தி முயற்சி மூலம் கிடைக்கின்ற வருமானத்தை கொண்டு வீட்டுச் செலவையும், பிள்ளைகளின் கல்விச் செலவையும் மிகுந்த சிரமத்துடன் கொண்டு செல்கின்றார்.மூத்த மகள் ஜனார்த்தினி க.பொ.த சாதாரனதரத்தில் 8ஏ,பி பெறுபேறு பெற்று சித்தியடையும் வரை பிள்ளைகள் படிக்க ஒரு கதிரை மேசை கூட இல்லாத தற்காலிக கொட்டில் வீட்டில் வசித்த அவர்களுக்கு அதன் பின்னர் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரின் உதவியால் ஒரு மேசையும் கதிரையும் கிடைத்துள்ளது.

க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்கும் வரை இவர்கள் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திற்கோ, பிரத்தியேக வகுப்புக்களுக்கோ சென்றது கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை கல்வியும், அதன் பின்னர் வீட்டில் சுய கற்றலுமே இவர்களை சிறந்த பெறுபேறுகளை பெற வைத்ததாக கூறப்படுகிறது.

ஜனார்த்தினி 2015 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 8ஏ,பி தரச் சித்தியையும் , உஷாயினி 2016 இல் 3ஏ,4பி,சி,எஸ் பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.

படிக்கின்ற காலங்களில் பல தடவைகளில் கொப்பி முடிந்துவிட்டால் உடனடியாக கொப்பிகளை வீட்டில் சொல்லி பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளது. பயிற்சி புத்தகங்கள் வாங்க முடியாது, தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் சக மாணவிகளிடம் பாடசாலையில் ஆசிரியர் இல்லாத பாடங்களின் கொப்பிகளை கேட்டால் கூட மாணவிகள் தர மறுத்து தங்களுடன் கதைப்பதனையே நிறுத்தியதாகவும் குறித்த மாணவிகள் கூறியுள்ளனர்.மேலும் நம்பிக்கையுடன் தாம் கற்றதாகவும், தங்களுக்காக தங்கள் பெற்றோர் படும் கஸ்ரம் தங்களுக்கு அந்த நம்பிக்கையை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியே எங்களின் வளமான எதிர்காலத்திற்கான ஒரேயொரு வழி என்பதனை நினைத்து கற்றோம். இதனால் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல நிலையை பெற்றுள்ளோம் என்றும் இச் சகோதரிகள் கூறியுள்ளனர்.

ஜனார்த்தினி விஞ்ஞானப் பிரிவில் 2பி சி பெறுபேற்றை பெற்று சித்த வைத்திய துறைக்கும், உஷாயினி ஏபிசி பெறுபேற்றை பெற்று பொறியியல் (E2) துறைக்கும் அனுமதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் மட்டுமல்ல, அந்த பிரதேசமும் பெருமைகொள்கிறது.

முதல் முதலாக ஒரு பொறியியலாளரும், வைத்தியரும் உருவானதை எண்ணி மலையாளபுரம் மண்ணும் மகிழ்ச்சியடைகிறது. ஒன்று இரண்டாகி, இரண்டு பத்தாகி செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம்.அத்தோடு வறுமை என்பது சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பதனையும் இந்த சகோதரிகள் வெளிப்படுத்தி நிற்கின்றார்கள் என மலையாளபுர மக்கள் மகிழ்சி வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இருவரும் பாடசாலையில் உயர்தரம் கல்வி கற்கும் போதே அவர்களின் செலவுகளை ஈடு செய்ய முடியாது பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகியிருந்தேன்.

ஆனால் தற்போது இருவரும் ஒரேநேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்கள். இது ஒரு புறம் அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபுறம் இவர்களின் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகின்றேன் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது என அவர்களின் தந்தை கூறியுள்ளார்.
Previous Post Next Post