இன்னும் சில தினங்களில் வழமைக்கு கொண்டுவர வேண்டும்… அமைச்சுக்களின் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தி – இன்னும் சில தினங்களில், அரச மற்றும் தனியார்துறைப் பணிகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என அமைச்சுக்களின் செயலாளர்களிடம் நான் இன்று அறிவுறுத்தினேன்.

நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவந்து, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும்,

அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்று பிற்பகல் சனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பிரத்தியேகச் சந்திப்பின் போது நான் குறிப்பிட்டேன்.

எல்லோரும் தமது கடமைகளைத் தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தைத் தளர்த்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது உரிய சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றிப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாய, மீன்பிடி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட கைத்தொழில் நிறுவனங்களை மீண்டும் செயற்படுத்துவதற்குத் தேவையான பறச்சூழலை அமைப்பதற்கு உரிய உதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நான் பணிப்புரை விடுத்தேன்.

புதிய பொருளாதார முறைமையொன்றை கட்டியெழுப்பும் பொறிமுறையை அமைக்கும் பொறுப்பையும் அமைச்சுக்களுக்கு வழங்குவதாகவும் நான் குறிப்பிட்டேன்.

மேலும் – ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகள் முகம்கொடுத்துள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு -எமது நாட்டின் விவசாய பொருளாதாரம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இன்று ஆராயப்பட்டது.

ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி – பயிர்ச்செய்ய முடியுமான நிலங்களை வினைத்திறன்மிக்க வகையில் அதற்குப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான புறச்சூழலை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன்.

இதற்காக – அரச பொறிமுறையைக் கிராமங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தையும் நான் விளக்கினேன்.

எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, எனது ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சரவையின் செயலாளர் எஸ். அமரசேகர ஆகியோரும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

You might also like